வியாழன், 29 ஏப்ரல், 2021

சோசியல் மீடியாவில் செல்போன் எண்ணை பகிர்ந்து பாஜக மிரட்டல்: சித்தார்த் புகார்

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து விமர்சனம் செய்தற்காக நடிகர் சித்தார்த்க்கு மிரட்டல் அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.


இது குறித்து, நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு பதிவில் என்னுடைய தொலைப்பேசி எண்ணை தமிழக பாஜகவினர் வெளியிட்டு என்னை திட்டவும் துன்புறுத்தவும் சொல்லியுள்ளனர்.  இவன் இனிமேலே வாயே தொறக்க கூடாது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.



அதற்கு, கொரோனாவையே தாங்கி விட்டோம் இதை தாங்க மாட்டோமா என்று சித்தார்த் பதிலடி கொடுப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில் என்னுடைய தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். எனக்கு இதுவரை 24 மணி நேரத்தில் 500 மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அனைத்து அழைப்புகளையும் பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான் பேசாமல் இருக்க மாட்டேன். நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள். என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஏப்ரல் 27ஆம் தேதி அன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதைக் கண்டித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

’மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தவறாக கூறுகின்றன அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என யோகி ஆதித்யநாத் கூறிய செய்தி ஒன்றினை மேற்கோளிட்டு, “சாதாரண மனிதாராக இருந்தாலும் சரி, புனிதராக இருந்தாலும் சரி, எந்த தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் அறை விழும்” என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்தார்.

மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை ட்விட்டரில் டேக் செய்து நீங்கள் கொரோனா போராளி அல்ல ‘கொரோனாவின் கூட்டாளி’ என்றும் சித்தார்த் விமர்சித்திருந்தார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த கருத்துகளுக்கு இணையத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது சித்தார்த் தொலைப்பேசி எண்ணிற்கு மிரட்டல் அழைப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது.

source https://tamil.indianexpress.com/india/bjp-tn-it-cell-leaks-siddharth-phone-number-abuse-calls-297142/