Covid19 second wave US, UK, EU pledge to help : கொரோனா வைரஸ் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை உடைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளர் ஜேக் சலீவன் இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜீத் தோவலை ஞாயிற்றுக் கிழமை அன்று தொடர்பு கொண்டு பேசினார். அப்போது “கொரோனா தாக்கத்தின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா எப்படி உதவியதோ அதே போன்று இந்தியாவின் தற்போதைய நிலை கண்டு அமெரிக்கா உதவ முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.
தடுப்பூசிகள் முதல் அதற்கான மூலப் பொருட்கள் வரை, ஆக்ஸிஜன் டேங்கர்கள் முதல் அதன் செறிவூட்டிகள் வரை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உதவ முன் வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை அசைத்து பார்க்கும் கொரோனா நம்முடைய பொறுமையை மிகவும் சோதிக்கிறது என்று குறிப்பிட்டு மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிறகு இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
600க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்ட் மருந்திற்கு தேவையான மூலப்பொருட்களை உடனே இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று தோவல் – சலீவன் பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை காக்கவும், முன்கள பணியாளர்களை காக்கவும் அமெரிக்கா மருந்துகள், சோதனை கருவிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் பி.பி.இ. ஆடைகள் ஆகியவற்றை இந்தியாவிற்கு அனுப்புவதோடு, ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் அதற்கு தேவையான இதர உபகரணங்களையும் அனுப்ப இருக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா – இந்தியா ஸ்ரெட்ஜெடிஜ் பார்ட்னெர்ஷிப் ஃபோரம் – US-India Strategic Partnership Forum (USISPF) திங் டேங்க் அறிவிப்பின் படி, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஒ. கண்டெய்னர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்டு இது இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே ஒரு டஜன் கண்டெய்னர்கள் அடையாளம் காணப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை மும்மடங்கு ஆக்கப்படும். டெல்லி மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சந்திக்கும் நாட்டின் இதர பகுதிகளுக்கும் விமானம் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்ல உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர்” என்று யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப் அறிவித்துள்ளது.
பல்வேறு உறுப்பு நிறுவனங்கள் பல்வேறு முக்கியமான கருவிகளை நன்கொடையாக கொடுக்க முன்வந்துள்ளது. 1 லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க ஆர்டர் செய்துள்ளது யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப். அமெரிக்கா, மெக்ஸிகோ, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல்வேறு சிறப்பு உதவிகளை பெற முயன்று வருகிறது இந்த அமைப்பு. விநியோக எல்லையில் இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ நிறுவனங்களில் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை இந்தியா விரைவில் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை அணுகிய யூ.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப். அமைப்பு ஐ.சி.யு படுக்கைகள், கோவிட் சோதனை கருவிகள், என்.95 மாஸ்க்குகள், மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. செவ்வாய் அல்லது புதன்கிழமை இந்தியாவிற்கு அவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நிதி கூட்டுறவு மேம்பாட்டு அமைப்பான (DFC) , பையோ இ தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க போதுமான நிதி அளிப்பதாக கூறியுள்ளது. 2022 ஆண்டு இறுதிக்குள் 1 பில்லியன் டோஸ்களை உருவாக்க அது திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா கூடுதலாக சி.டி.சி. மற்றும் யு.எஸ்.ஏ.ஐ.டி. அமைப்பில் இருந்து பொது சுகாதார ஆலோசகர் குழு ஒன்றை உருவாக்கி அமெரிக்க தூதரத்துடன் இணைந்து இந்திய சுகாதாரத்துறையுடன் பணியாற்ற திட்டமிட்டுள்ளது. யு.எஸ்.ஏ.ஐ.டி. சி.டி.சியுடன் விரைவாக இணைந்து பணியாற்றி இந்தியாவுக்கு தேவையான உதவிகளை உலக நிதி மூலம் உருவாக்கி தரும். இங்கிலாந்தியில் இருந்து 9 ஏர் லைன் கண்டெய்னர்கள் மூலம் 495 ஆக்ஸிஜன் கண்டெய்னர்கள் மற்றும் 120 நான் இன்வாசிவ் வெண்டிலேட்டர்கள் மற்றும் 20 மேனுவல் வெண்டிலேட்டர்களை இந்த வாரத்திற்குள் அனுப்ப உள்ளது.
மனித இழப்புகளை தவிர்க்க நூற்றுக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட முக்கிய மருத்துவ உபகரணங்கள் இப்போது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்று இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறினார்.
நேற்று காலை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்லிங்கன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இந்திய மக்களுக்காக பிரார்த்திக்கின்றோம். இந்தியாவுடன் நாங்கள் பணியாற்றி வருகின்றோம். விரைவில் இந்திய மக்களுக்கும் முன்கள் பணியாளர்களுக்கும் கூடுதல் ஆதரவை நாங்கள் அளிப்போம் என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து நன்றி கூறினார். நெருக்கடி மேலாண்மைக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஜானெஸ் லெனார்சிக், 27 நாடுகளின் தொகுதி இந்திய மக்களை ஆதரிப்பதற்காக உதவிகளைத் திரட்டுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார். “இந்தியாவின் உதவியைக் கோரிய பின்னர், நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய சிவில் பாதுகாப்பு பொறிமுறையை செயல்படுத்தியுள்ளோம். இந்திய மக்களுக்கு ஆதரவாக அணிதிரட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். அவசர தேவையாக ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் கூறினார்.
கனடா வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர், இந்தியாவுக்கு உதவ வளங்களை திரட்டுகிறோம் என்று கூறினார். ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸரீப்பும் இந்தியாவிற்கு ஆதரவு க்கரம் நீட்டியதோடு, “இந்த உலகளாவிய துயரத்தை முடிவுக்கு கொண்டுவர உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்” என்றும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/covid19-second-wave-us-uk-eu-pledge-help-on-vaccines-to-oxygen-295852/