தூத்துக்குடியில் தமிழக அரசால் மூடப்பட்டு இருக்கும், ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்குமாறு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இது தொடர்பாக பதிலளிக்க, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்று அறிவுரை வழங்கியது. உச்ச நீதிமன்றமும் இந்த கருத்தை வலியுறுத்தியது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார், திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, பாஜக சார்பில் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்தனர். ஆக்ஸிஜன் உற்பத்தியை தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது. தமிழக அரசுதான் ஆலைக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பாஜக தலைவர் முருகன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவித்தார்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு வழங்க கூடாது. மாவட்ட அல்லது மாநில அளவில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல என்று கூறிய முதல்வர் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு தான். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது என கூறினார்.
பின்னர் கூட்டத்தில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்பே பிற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால், மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-all-party-meeting-sterlite-oxyzen-295913/