புதன், 28 ஏப்ரல், 2021

எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு தடுப்பூசி இருப்பு?

 கொரோனா தொற்றுப் பரவல் இந்தியாவில் உச்சமடைந்துள்ள நிலையில், பெரும்பாண்மையான மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மாநில அரசுகளின் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய அரசு நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை மாநிலங்களின் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்த அளித்திருப்பதாகவும், அடுத்த மூன்று தினங்களில் சுமார் 86 லட்சம் தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, அனைத்து மாநிலங்களிலும் இன்னும் 1,00,47,157 டோஸ் தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளன. அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தில் 10.10 லட்சம் டோஸ்களும், மகாராஷ்டிராவில் 9.23 லட்சம் டோஸ்களும், பீகாரில் 7.50 லட்சம் டோஸ்களும், குஜராத்தில் 6.09 லட்சம் டோஸ்கள்ம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5.95 லட்சம் டோஸ்களும் இருப்பில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மாநிலங்களில் இருப்பில் உள்ள டோஸ்களை முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களில் 86,40,000 டோஸ் தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, மாநிலத்தில் தடுப்பூசிகள் முடிந்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. தடுப்பூசி பற்றாக்குறையால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் இயக்கத்தை மோசமாக பாதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிட்டுள்ளதை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மகாராஷ்டிரா இதுவரை பெற்றுள்ள மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது, 1,58,62,470 என்றும், இதில், 0.22% வீணாக்கப்பட்டது போக, 1,49,39,410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாநிலத்தில், 9,23,060 டோஸ் தடுப்பூசிகள் மருந்துகள் இருப்பில் உள்ளதாகவும், அவை, முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களில் மகாராட்டிராவுக்கு 3,00,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்டிராவை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் உத்தரப்பிரதேசத்திற்கு 11 லட்சம் டோஸ்களும், பீகார் மாநிலத்துக்கு 7 லட்சம் டோஸ்களும், அசாமிற்கு 6.5 லட்சம் டோஸ்களும், குஜராத்துக்கு 5 லட்சம் டோஸ்களும் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு 4.8 லட்சம் டோஸ் மருந்துகளும் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் தலா 3 லட்சம் வீதம் தடுப்பூசி மருந்து அளிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/over-1-crore-vaccine-doses-left-with-states-central-ministry-of-health-reports-296642/