ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

தமிழகத்திற்கு கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளது; சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

 இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு பத்தாயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை, 99,219 தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதைவிட அதிகமாக 1,09,429 தடுப்பூசி மருந்துகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டதாக, மாநில சுகாதார அமைசசக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தடுப்பூசி பற்றிய தகவல்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அதில் நேற்று ஏப்ரல் 23 ட்விட்டர் பதிவில், சீரம் இன்ஸ்டிடியூட் அனுப்பிய 2 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நண்பகலுக்குள் சென்னைக்கு வரும். தொலைதூர கிராமங்களில் கூட அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய 24/7 மணிநேரம் கண்காணிப்பு குழு செயல்படுகிறது. அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அப்படியே தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 24, இன்றைய பதிவில், 2 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் மற்றும் 2 லட்சம் கோவிஷீல்ட் டோஸ்கள் என மொத்தம் 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மாநில சேமிப்பில் கூடுதலாக சேர்ந்து உள்ளது. இந்த தடுப்பூசிகள் மாவட்ட தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து வழங்கப்படும். தடுப்பூசி உயிர்களைக் காப்பாற்றுகிறது, எனவே நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் தெரிவித்துள்ளார்.