செவ்வாய், 27 ஏப்ரல், 2021

மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை: வெற்றி ஊர்வலங்களை நடத்த தடை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதும் அதற்குப் பின்னரும் அனைத்து வெற்றி ஊர்வலங்களையும் தேர்தல் ஆணையம் தடை செய்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கொரோனா நெறிமுறைகளை மீறுவதில் இருந்து அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கு ஒரு நாள் கழித்து தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெறுவதற்கு வெற்றி பெற்ற வேட்பாளருடன் செல்ல அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 பேர் என தேர்தல் ஆணையம் வரையறை செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து, “இன்று நாம் இருக்கும் இந்த நிலைமைக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு” என்று கூறியது.

நான்கு நாட்கள் கடுமையான விசாரணைக்குப் பிறகு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்தது. கொரொனா வைரஸ் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் உரிய கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்பதை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று கடுமையாக விமர்சித்தது.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவில் கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டியிட்டுள்ளனர். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இருந்தார்.

கோவிட் நெறிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க்கப்பட வேண்டும் என்பது குறித்து மே 2ம் தேதிக்கு முன்னர் ஒரு வரைபடத்தைத் தயாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது. மேலும், “இந்த மாநிலம் உங்கள் தனி அதிகாரத்துக்கு மேலும் அடிபணியாது. தேர்தல் அணையம் சரியான நடவடிக்கைகளை எடுக்க தவறினால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உத்தரவிட நேரிடும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.

source https://tamil.indianexpress.com/election/covid-19-cases-surge-election-commission-bans-victory-processions-during-and-after-counting-of-votes-on-may-2-296457/