புதன், 28 ஏப்ரல், 2021

கொரோனா இரண்டாவது அலை; தமிழகத்தில் 10 நாட்களில் 1.26 லட்சம் பேருக்கு தொற்று

 தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் மொத்தம் 1,08,855 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 77 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14,043 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 1.26 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், மாநிலத்தின் புதிய நெறிமுறைகள் இப்போது 10 நாட்களுக்கு முன்பே நோயாளிகளை வீட்டிற்கு அனுப்ப மருத்துவமனைகளை அனுமதித்துள்ளன. புதிய நெறிமுறையின்படி இப்போது தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்களை வீட்டிற்கு அனுப்பலாம். மேலும் அறிகுறிகள் இருப்பவர்களை 10 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கலாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று 14,043 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஏற்கனவே, பரிசோதனை செய்த 10 நாட்களுக்குப் பிறகு தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கலாம் என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் பெரும்பாலானோர் அறிகுறிகள் வெளிப்பட்ட மூன்றாவது அல்லது நான்காவது நாளில் மட்டுமே சோதனைக்குச் செல்கிறார்கள் இதனால் பரிசோதனை முடிவுகள் வரும் நேரத்தில் பலர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், என்று கோவிட் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி கூறினார். கூடுதலாக, பல மருத்துவமனைகள் இப்போது ஆக்ஸிஜன் தேவையில்லாத நோயாளிகளை வெளியேற்றுகின்றன அல்லது தீவிர கண்காணிப்பு தேவைப்படாத வேறு எந்த பாதிப்புகளையும் கொண்டிருக்காத நோயாளிகளை வெளியேற்றுகின்றன. இந்த நோயாளிகளில் பலர் வீட்டு தனிமைக்கு அனுப்பப்பட்டாலும், அவர்களின் பெயர்கள் கவனக்குறைவாக வெளியேற்றப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமான சென்னையில் செவ்வாய்க்கிழமை மட்டும் புதிதாக 4,640 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 27 பேர் இறப்புகளும் பதிவாகியுள்ளன. சென்னைக்கு அருகிலுள்ள  செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,181 புதிய பாதிப்புகளும், திருவள்ளூரில் 717 புதிய பாதிப்புகளும், காஞ்சிபுரத்தில் 301 புதிய பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 6,839 புதிய பாதிப்புகளும் 48 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும் சென்னை மண்டலத்தில் தற்போது 47,961 பேர் சிகிச்சையில் உள்ளனர். வடக்கில் உள்ள மற்ற மாவட்டங்களில் மொத்தமாக 1,617 புதிய பாதிப்புகளும் ஆறு இறப்புகளும் பதிவாகியுள்ளன.

996 புதிய தொற்றுகளுடன், கோயம்புத்தூர் மாநிலத்தில் மூன்றாவது இடத்திலும், மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் முதலிடத்திலும் உள்ளது. மேற்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் மொத்தமாக 3,298 புதிய தொற்று பாதிப்புகளும் ஒன்பது இறப்புகளும் பதிவாகியுள்ளன.

தெற்கு பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் 2,695 புதிய தொற்று பாதிப்புகளும். ஒன்பது இறப்புகளும் பதிவாகியுள்ளன. தெற்கில் உள்ள மாவட்டங்களில், திருநெல்வேலி 680 புதிய தொற்றுகளுடன் தெற்கு மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. மத்திய மண்டலத்தில், 1,379 புதிய தொற்று பாதிப்புகளும் ஐந்து இறப்புகளும் பதிவாகி உள்ளன. 468 புதிய தொற்று பாதிப்புகளுடன் மத்திய மண்டலத்தில் திருச்சி முதலிடத்தில் உள்ளது. செவ்வாய்க்கிழமை, குறைந்தது 22 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சென்னைக்குப் பிறகு, செங்கல்பட்டு (8) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் ஏழு பேரும், திருவள்ளூரில் ஆறு பேரும் சேலத்தில் ஐந்து பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.  .

மறுபுறம் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று 1.3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/covid-second-wave-tamil-nadu-chennai-new-cases-296630/