கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்திருக்கும்போது, பிற மாநிலங்களுக்கு திருப்பி விடுவது நியாயமில்லை என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலையால் வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலையால் நேற்று (ஏப்ரல் 24) ஒரே நாளில் கொரோனா தொற்று எண்ணிக்கை 14,842 ஆக பதிவானது. மேலும், ஒரே நாளில் கொரோன பாதிப்பால் தமிழகத்தில் 80 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 668 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று நோயாளிகள் அதிகரித்து வருவதால் சுவாச பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்ஸிஜன் தேவை திடீரென அதிகரித்தது. டெல்லி கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. டெல்லியில் ஆக்ஸிஜன் இல்லாமல் 20 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது பிற மாநிலங்களுக்கு திருப்பி விடுவது நியாயமில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் தேவை தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவை 310 மெட்ரிக் டன் என்ற அளவில் உள்ளது. தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு திருப்பி விடுவது நியாயமில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை. தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் தேவை அதிகமாக இருப்பதால், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பி.எம். கேர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மருத்துவ மனைகளுக்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-palaniswami-letter-to-pm-modi-that-it-is-not-fair-to-divert-oxygen-to-other-states-when-tamil-nadu-needs-it-295674/