மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திருந்த நிலையில், மே 1ம் தேதி ஊரடங்கு அவசியமில்லை என்றும் மே 2ம் தேதி வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று கேட்டு வருகிறது. அப்போது, 2ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கூட்டங்களைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கும் அமல்படுத்த முடியுமா என்றும் மே 1ம் தேதி விடுமுறை அன்று அமல்படுத்தலாம் என்று ஒரு பரிந்துரையையும் முன்வைத்தது. இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர், “மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால், அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பான்மையான மக்கள் அன்றையதினம் வெளியே வரவாய்ப்பில்லை. அதுமட்டுமில்லாமல், மே 1ம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதால் முழு ஊரடங்கு தேவையில்லை என்று கூறினார்.
மேலும், “மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் நபர்களுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டுதல்களின் படி அனுமதிக்கப்படுவார்கள். மே 2ம் தேதி தேர்தல் வெற்றிகளைக் கொண்டாட யாரும் வெளியே வரக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விரிவான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அது முழுமையாக பின்பற்றபடும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.” என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளை அறிவிக்க அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது.
மே 2 ஊரடங்கு நாளில் வேட்பாளர்கள் முகவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/may-1st-no-full-curfew-on-saturday-but-may-2nd-full-curfew-tamil-nadu-govt-says-in-chennai-high-court-297306/