கோவிட் -19 எழுச்சி நம்முடைய, சுகாதார அமைப்பை முடக்குவதால், அவசரகால தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களான டேங்கர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற முக்கியமான உயிர் காக்கும் சாதனங்கள் ஆகியவற்றிற்காக இந்தியா பெரிய நாடுகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.
வாஷிங்டன் டி.சி.யில் வார இறுதியில் அரசாங்க மற்றும் தனியார் துறை உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கூட்டங்கள் நடைபெற்று வருவதை சண்டே எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது. அந்த சந்திப்புகளின் நேர்மறையான விளைவுகளை எச்சரிக்கையுடன் நம்புவதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான முக்கிய பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதாக இல்லை என்று, “நெருங்கிய ஆலோசகரிடமிருந்து” இந்த வார தொடக்கத்தில் வந்த தகவல் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாக இருந்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அடுத்த இரண்டு நாட்களில் இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும் என்ற முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் பலர் இந்தியாவுக்கு உதவுவதற்கு ஆதரவாக உள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க வர்த்தக சபை சனிக்கிழமையன்று, உயிர் காக்கும் கருவிகளைத் தவிர, சேமிப்பில் உள்ள மில்லியன் கணக்கான அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை, வைரஸ் தொற்று கடுமையாக தாக்கியுள்ள இந்தியா, பிரேசில் மற்றும் பிற நாடுகளுக்கு கொடுத்து உதவ வெள்ளை மாளிகைக்கு கோரிக்கை வைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை, அமெரிக்க சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் “இந்தியாவில் இருந்து இதயத்தை உடைக்கும் காட்சிகள் வருகிறது. இந்த மோசமான வைரஸை எதிர்த்துப் போராட நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபாசி மேலும் சி.டி.சி (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) தொழில்நுட்ப உதவிக்காக இந்திய சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், “நாங்கள் எங்களால் முடிந்த எந்த வகையிலும் இந்தியாவுக்கு உதவ முயற்சிக்கிறோம்” என்றும் கூறினார். மேலும், “நிச்சயமாக இந்தியா தனது மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும், ஏனென்றால் வைரஸை எதிர்த்து போராட அது தான் ஒரேவழி , அதற்காக நாங்கள் உதவப் போகிறோம்,” என்றும் டாக்டர் ஃபாசி கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “நெருக்கடிக்கு தீர்வு காண உதவும் வழிகளுக்காக அரசியல் மற்றும் நிபுணர்களின் மட்டத்தில் இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்கா நெருக்கமாக பணியாற்றி வருகிறது” என்றார்.
இதுவரையில் எந்தவொரு குறிப்பிட்ட உதவிக்கும் உத்தரவாதமான ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றாலும், தடுப்பூசிகள் மற்றும் அதன் பொருட்கள் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டை மென்மையாக்குவதற்கான அறிகுறிகளாக இந்தியா இதைப் பார்க்கிறது. பல அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று வாதிட்டுள்ளனர்.
இப்போது ஒரு மாதமாக, மூலப் பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்கள், முக்கியமான நுகர்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றில் பற்றாக்குறை இருப்பதாக தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் அப்ஸ்ட்ரீம் சப்ளையர்கள் புகாரளித்து வருகின்றனர். காலப்போக்கில், இத்தகைய பற்றாக்குறைகள் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை பாதிக்கும். இதனால் சில தயாரிப்புகளுக்கான ஒழுங்குமுறை அனுமதிகளை தாமதப்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
source https://tamil.indianexpress.com/india/us-help-india-urgent-supplies-corona-vaccine-295653/