புதன், 28 ஏப்ரல், 2021

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.

பத்திரிக்கை அறிக்கை

தேதி - 28.04.2021





தப்லீக் ஜமாஅத் தொடர்பான காவல்துறை எச்சரிக்கை - தவ்ஹீது ஜமாஅத் கடும் கண்டனம்.



சென்னை, கிருஷ்ணகிரி, தென்காசி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணிகளில் தப்லீக் ஜமாஅத்தின் நிர்வாகிகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. ஆகவே மதத்தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கின்றது”! 



இது காவல் துறை வெளியிட்ட எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை  முஸ்லிம்களிடம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாகவே உள்ளது.  காவல் துறையின இச் செயல் கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.



இது கொரோனாவுக்கு எதிரான காவல்துறையின் விழிப்புணர்வு நடவடிக்கைத் தான்  என்று  இதை எளிதில் கடந்து விடமுடியாது.


 ஏற்கனவே கொரோனா  பரவலுக்கு தப்லீக் ஜமாஅத் தான் காரணம்   என்பதை காவல்துறை மறு பதிவு செய்வதாகவே இதை காண முடிகின்றது. 



இது மீண்டும் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வுக்கு வித்திடுவதாகவே அமைகின்றது. 



"ஏனிந்த இரட்டைப்பார்வை?


உத்தரகாண்ட் ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் நாடெங்கிலும் பக்தர்கள் 13 இலட்சத்திற்கு மேல் போய் கலந்துக் கொண்டிருக்கும் போது தமிழகம் அதற்கு விதிவிலக்கு கிடையாது. 



தமிழகத்தில் கலந்துக் கொண்ட பக்தர்கள் யார்? யார்? எத்தனை பேர் கலந்துக் கொண்டு திரும்பி இருக்கின்றார்கள்? இது தொடர்பாக காவல்துறை வாய் திறக்கவில்லை.



உண்மையில் இப்போது உடனே கண்டறியப்பட வேண்டியவர்கள் கும்ப மேளாவில் கலந்துக் கொண்டவர்கள் தான்.  



அவர்களின் நடமாட்டம் தான் கண்காணிக்கப்படவேண்டும்.  காரணம் அவர்களில் பலருக்கு  கொரோனா பாஸிடிவ் என்று ரிப்போர்ட் வந்திருக்கின்றது. 



அதிலும் குறிப்பாக அதில் பங்கெடுத்த  சுகாதார அதிகாரிகளுக்கும் கொரோனா  பாஸிட்டிவ் என்று ரிப்போர்ட் உறுதியாகி இருக்கின்றது.



இந்த வகையில் அவர்கள் தான் நடமாடும் வைரஸ் வெடிக்குண்டுகள்!  அவர்கள் எங்கு வெடிப்பார்கள்? எப்படி வெடிப்பார்கள்? என்று யாருக்கும் தெரியாது. 



தமிழக காவல்துறை உடனடியாக கவனத்தை திருப்ப வேண்டிய கூட்டம் கும்பமேளாக் கூட்டம் தான்.



ஆனால் அதன் பக்கம் கவனம் செலுத்தாமல் தப்லீக் ஜமாஅத்தின் பக்கம் கவனத்தை செலுத்தியிருப்பதில் ஏதோ  உள் நோக்கம் இருப்பதாகவே தெரிகின்றது.



தமிழக காவல்துறை ஏன் இந்த இரட்டைப் பார்வை பார்க்கின்றது என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் கேள்வி எழுகின்றது.  



வடமாநிலங்களில் முஸ்லிம்கள் வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களை கொரோனா நோயாளிகளின் சிகிச்சை முகாம்களாக மாற்றி, மனித நேயத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக காவல் துறையின் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது செலுத்துகின்ற பார்வை ”ஒரு மத” வெறுப்புப் பார்வையாக அமைந்திருக்கின்றது. 



ஊமையாகி,ஊனமாகி ஒடுங்கிய ஊடகங்கள்!


கொரோனா முதல்  அலையின் போது ஊடகங்களும் சங்கப்பரிவாரங்களும்  தப்லீக் தான் வைரஸ் பரவலுக்கும், பாய்ச்சலுக்கும் காரணம் என்று ஒருமித்து ஒரே குரலில்  சங்கூதின. அதிலும் ரிபப்ளிக் டிவீயின்  அதிமேதாவி அர்னாப் கோசாமி கொடுத்த காசுக்கும் கூடுதலாகவே கூவினான். 



ஆனால் கும்பமேளாக் கூட்டத்தைப் பற்றி இப்போது அவனும் ஏனைய ஊடகங்களும் வாய்திறக்கவே இல்லை! ஊடகங்களின் சப்த நாடிகள் ஒட்டுமொத்தமாகவே   அடங்கி விட்டன!



சங்கிகளுக்கு ஒரு பார்வை!முஸ்லிம்களின் மீது வேறுபார்வை. ஊடகங்களுக்கு  ஏனிந்த இரட்டைப் பார்வை?  



தப்லீக் ஜமாஅத்தினர் மீது மகாராஷ்ட்ரா மாநிலத்தில்  பல்வேறு குற்றப்பிரிவுகளில்  பதிவு செய்யப்பட்ட 3 முதல் தகவல் அறிக்கையை  அம்மாநில உயர் நீதிமனறம் ரத்து செய்ததுடன் சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி 39  தப்லீக் ஜமாஅத்தினரை விடுதலையும் செய்தது. இவர்களில் 29 பேர் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் உள்நாட்டைச் சார்ந்தவர்கள். 



”அரசாங்கத்தை ஆளுகின்ற அரசியல் கட்சி  இது  போன்று பேரிடர், பேரழிவு நோய் ஏற்படும்  சூழ்நிலையில் யாரையாவது பலிக்கடாவாக்கும் வாய்ப்பைத் தேடுகின்றது. இம்மாதிரியான சூழ்நிலைகளில் இது போன்ற வெளிநாட்டினர்கள் பலிகடாவாக மாட்டிக் கொள்கின்றனர்” என்று இது தொடர்பான தீர்ப்பின் போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்ட வார்த்தைகள் மிகவும் இங்கு கவனித்தக்கவையாகும்.




இது போன்று மும்பை உயர் நீதிமனற வழியில் சென்னை உயர்நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் தப்லீக் ஜமாஅத்தினர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தன. கைது செய்யப்பட்ட தப்லீக் ஜமாஅத்தினரை விடுதலையும் செய்தன.  




வைரஸ் பரவலுக்கு  தப்லீக் ஜமாஅத் ஒரு தம்புடி அளவுக்கு கூட காரணமில்லை என்பதை இந்த 3 உயர் நீதிமன்றங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. 




இத்தனைக்கு பிறகும் தமிழக  காவல்துறை தப்லீக் ஜமாஅத்தின் மீது ஒருதலைபட்சமான பார்வையை பதிவு செய்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.  




இதில் வேடிக்கை என்னவெனில் கும்பமேளாவிலிருந்து திரும்பியவர்களில்  தப்லீக் ஜமாஅத்தின் நிர்வாகிகளும் திரும்பியிருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருப்பதால் மதத்தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் துறை கூறியிருப்பது தான். 



இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகும். . இது தப்லீக் ஜமாஅத்தின் மீதான பார்வை முற்றிலும் தவறான பார்வை என்பதையே வலுப்படுத்துகின்றது.



அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் காவல்துறையின் இது போன்ற பார்வை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது ஒரு விதமான வெறுப்புணர்வையே பிற சமுதாய மக்களிடம்  விதைக்க வழி வகுக்கும்!



சென்ற தொற்றின் போது முஸ்லிம்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டு அதன் வலியிலிருந்து  சமுதாயம் இப்போது தான் மீண்டு வந்திருக்கின்றது.  திரும்பவும் அதே வேதனையை முஸ்லிம்கள் மீது காவல் துறை திருப்பி விடுவதாக இந்த எச்சரிக்கை அமைந்திருக்கின்றது என்பதை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வேதனையுடன் பதிவு செய்துக் கொள்கின்றது. அதை வன்மையாகக் கண்டிக்கின்றது.






இப்படிக்கு,

முஹம்மதுமீரான்,

மாவட்ட செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

புதுக்கோட்டை