சென்னையில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 3,500 பேருக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 45 வயதை கடந்தவர்களுக்கு கடந்த 45 நாட்களாக, 400 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரையில், சென்னை மாநகராட்சி முழுவதும் 12 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சென்னையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் தரவை ஆராய்ந்து பார்த்ததில், அரசு விடுமுறை தினமான 14-ம் தேதி அன்று 14,175 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஏப்ரல் 15-ம் தேதி அன்று சுமார் 40,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை இல்லாத அதிகப்பட்ச எண்ணிக்கையாக 16-ம் தேதி 49,010 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி குறித்த சந்தேகங்களை மக்களிடையே கேட்டறிந்து, அதற்கான மருத்துவ விளக்கத்தை அளிப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில், ஆன்லைன் கருந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்பட மருத்துவ வல்லுநர்கள் பலர் ஃபேஸ்புக் நேரலையில் கலந்துக் கொண்டு மக்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தனர். பொதுமக்கள் பலர், இந்த நேரலையில் கலந்துக் கொண்டு தடுப்பூசி குறித்த தங்களது சந்தேகங்களை தீர்த்துக்க் கொண்டனர். இதனால், இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
இருப்பினும், பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று, 10,018 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய, மாநகராட்சி அதிகாரி ஒருவர், பெரும்பாலானோர் ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள விரும்பாதது ஒரு காரணமாகவும், பல தனியார் மருத்துவமனைகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாகவும் தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின், நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும்பாலான மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது, என்றார். மருத்துவர்கள் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டது காரணமில்லை என கூறியும், சிலர் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தினமும் 60,000 பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கோடு தடுப்பூசி பணியை ஆரம்பித்தது. அப்போது தான் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என மாநகராட்சி நிர்வாகம் கருதியது. ஆனால், சென்னை மாநகராட்சி தனது இலக்கை இன்றளவிலும் எட்டாதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/greater-chennai-corporation-corona-vaccine-drive-reach-hasnt-hits-target-295329/