வியாழன், 29 ஏப்ரல், 2021

புத்தகத்தைத் திறந்து தேர்வு எழுத அனுமதி: அண்ணா பல்கலை அறிவிப்பு

 கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி, பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான 2, 4 மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்தான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து மாணவர்களும் ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் எனவும், மேலும், மாணவர்களுக்கு புத்தகத்தை திறந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உள் மதிப்பீட்டுத் தேர்வுகளில், இதற்கு முன்னர் புத்தகத்தை திறந்து தேர்வு எழுத மாணவர்களுக்கு பல முறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், செமஸ்டர் தேர்வுகளில் திறந்த புத்தகத் தேர்வு நடைபெறுவது இதுவே, முதல் முறை ஆகும்.

இது குறித்து, தகவல் தெரிவித்த பல்கலைக்கழக நிர்வாகிகளில் ஒருவர், உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கு திறந்த புத்தகத் தேர்வு முறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இறுதி செமஸ்டர் தேர்வுகளில் பயன்படுத்தப்படுவது, இதுவே முதல் முறை. கொரோனா தொற்று உச்சமடைந்ததன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள், திறந்த புத்தகத் தேர்வாக நடத்தப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். மேலும், திறந்த புத்தகத் தேர்வு முறை இறுதியாண்டு செமஸ்டர் எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் திறந்த புத்தகத் தேர்வு முறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும், இதே முறையில் தேர்வு நடத்த விவாதித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

பொறியியல் மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வில், முதல் பிரிவில் மொத்தம் 10 மதிப்பெண்களுக்கு, ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் ஐந்து இரண்டு மதிப்பெண் கேள்விகள் இருக்கும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரண்டாவது பகுதி, 40 மதிப்பெண்களுக்கு, ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் ஐந்து எட்டு மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள் இருக்கும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-open-book-end-semester-exams-at-anna-university-chennai-students-293322/