திங்கள், 26 ஏப்ரல், 2021

சாதம் வடிநீர், புதினா, சீரகத் தூள்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க!

 தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகமான மக்கள் அரிசி சாதத்தை உணவாக உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அரிசி சாதம் செய்யும்போது அதில் வரும் கஞ்சி ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அரிசி சாதம் வடித்த கஞ்சியில் நமது உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது பலபேருக்கு தெரிவதில்லை. ஆனால் இந்த கஞ்சியில்  மனிதனின் தலை முதல் கால் வரை நன்மை தரக்கூடிய அதிக ஆரோக்கிய சத்துக்கள் உள்ளன.


அரிசி வடித்த கஞ்சியின் பயன்கள் :

குளித்து முடித்தவுடன் அரிசி கஞ்சியை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால், தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். தலை நாள் முழுவதும் குளிர்ச்சியாக இருக்க உதவும்.

வெயில் காலத்தில், ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். அதில் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி பெருகும். அரிசி கஞ்சி யுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைத்தால், கால் வீக்கத்தை குறைக்கும் வலி நிவாரணியாக செயல்படும்.

அரிசி கஞ்சியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் குழந்தைகளின்  உடல் வளர்ச்சிக்கு நன்மை சேர்க்கும். அரிசி கஞ்சியில், மோர் கலந்து சாப்பிட்டால், உடலில் நீர் இழப்பை ஈடுசெய்ய உதவும. பசியை தூண்டும் சக்தியும் அரிசி கஞ்சிக்கு உண்டு. அதனுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் பசியை தூண்டும் மற்றும் உணவும் எளிதில் செரிமானமாகும்.

அரிசி கஞ்சியை காட்டன் துணியை கஞ்சியில் முக்கி முகத்தில் தடவி, உலர்ந்ததும் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும். சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்தவும் அரிசி கஞ்சி பயன்படுகிறது.  தீக்காயத்திற்கு அரிசி கஞ்சியை பயன்படுத்தினால் காயம் ஆறுவதோடு, குளிர்ச்சியாகவும் இருக்கும்.

வெளியில் செல்லும் முன்பாக கஞ்சியை கொஞ்சம் உடலில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டு சென்றால், சருமத்திற்கு பாதிப்பு எதுவும் நேராது.  தோலில் ஏற்படும் சுருக்கங்களை இது நீக்கும். நெற்றி, கழுத்து, கை, முகம் போன்ற இடங்களில் தேய்த்து வருவதன் மூலம் வயதான தோற்றத்தை தவிர்க்கலாம்.

வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வடித்த கஞ்சியில் வெந்தயத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.  வேர்க்குரு பிரச்சினைக்கும் இது நிவாரணம் தரும். தொடர்ந்து சில நாட்கள் வேர்க்குரு மீது தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

source https://tamil.indianexpress.com/lifestyle/tamil-health-tips-rice-kanji-benifits-in-tamil-update-295736/