ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

தமிழகத்தில் ஒரே நாளில் 15 ,000-ஐ நெருங்கிய கொரோனா: செங்கல்பட்டு, கோவையிலும் புதிய உச்சம்

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15000ஐ நெருங்கி வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மாநிலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இந்நிலையில் இன்று புதிய உச்சமாக 14,842 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் 14,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 43 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த 18 பேருக்கும், பீகாரில் இருந்து வந்த 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 4,086 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூரில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் செங்கல்பட்டில் 1,163 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,004 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூரில் 793 பேருக்கும், மதுரையில் 596 பேருக்கும், திருநெல்வேலியில் 525 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு இரட்டை இலக்கத்தை தாண்டியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது.

இன்று ஒருநாள் மட்டும் மாநிலத்தில் 80 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில் 39 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை தமிழகத்தில் 13,475 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 9,142 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர். தற்போது தமிழகத்தில் 1,00,668 பேர்  சிகிச்சையில் உள்ளனர். இதுவரையிலான மொத்த பாதிப்பு பத்து லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 10,66,329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-corona-positive-cases-today-april-24/