வியாழன், 29 ஏப்ரல், 2021

வாக்கு எண்ணிக்கை: முகவர்களின் முக்கியத்துவம், பணிகள் எவை?

 


முகவர்கள் என்போர் யார் ?

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்களின் பிரதிநிதியாக செயல்படுபவரே முகவர்கள். அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் நம்பிக்கைக்கு உரிய, 18 வயது நிரம்பிய ஒருவரே அக்கட்சியின் முகவராக நியமிக்கப்படுவார். குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் யார் என்பது, வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே உறுதி செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதே முகவர்களின் முதன்மையான பணி. இந்த பணியானது ஒரு நாள் பணியாகவே கருதப்படும்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடிதம், முகவர்களின் அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படும். முகவர்களாக செயல்படுபவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் குறித்து முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என யாரும் முகவர்களாக செயல்பட இயலாது. அரசுப் பணியில் உள்ளவர்கள் வாக்கு எண்ணும் போது முகவர்களாக செயல்பட்டால், மூன்று மாதம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

வாக்கு எண்ணும் போது முகவர்களின் பணி என்ன?

வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு எந்திரங்களை மேஜையின் மீது தேர்தல் அதிகாரிகள் வைப்பார்கள். அப்போது, எந்திரத்தின் மீது ஒட்டப்பட்ட லேபிள்கள் சரியான இருப்பதை முகவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின், தேர்தல் அதிகாரிகள் எந்தெந்த வேட்பாளர்களுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளதென காண்பிப்பார்கள். அப்போது, அந்த எண்ணிக்கையை தவறாது முகவர்கள் குறித்துக் கொள்வார்கள்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனேயே வாக்கு சதவீதம் கணக்கிடுவதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு தெரிவிக்கப்படும். இந்த எண்ணிக்கையானது, ஒவ்வொரு கட்சியின் முகவர்களிடமும் இருக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் காண்பிக்கும் எண்ணிக்கையும், வாக்குப்பதிவு அன்று தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையும் சரியாக உள்ளதான முகவர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், வேட்பாளர்கள் பெற்றதாக அறிவிக்கப்படும் வாக்கு எண்ணிக்கையிலும் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையில் குழப்பம் இருப்பின், குறிப்பிட்ட கட்சியின், சீனியர் முகவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். அதன் பின்னர், சீனியர் முகவர் மைய தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். அப்பொது, வாக்குப்பதிவு எந்திரத்தையும், விவிபேட் எந்திரத்தையும் சரிபார்ப்பார்கள். அப்போது, தேர்தல் அதிகாரியால் எண்ணிக்கையில் குளறுபடி இருப்பது நிரூபிக்கப்பட்டால், குறிப்பிட்ட எந்திரத்தின் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்படும்.

source https://tamil.indianexpress.com/election/assembly-elections-vote-counting-agents-role-responsibilities-explain-297111/