வெள்ளி, 30 ஏப்ரல், 2021

தடுப்பூசி வாங்க அரசுக்கு ரூ2 லட்சம்: மன்சூர் அலிகானுக்கு கோர்ட் உத்தரவு

 

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைச்சுவை நடிகரான விவேக், கடந்த ஏப்ரல் 17-ந் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர்அலிகான், கொரோனா தடுப்பூசியை காரணம் காட்டி காரணம் காட்டி கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இதனால் நடிகர் மன்சூர் அலிகான் மீது பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன், என குறிப்பிட்டார்.

தொடர்ந்து இந்த மனு மீதாக விசாரணையில், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என கூறியதை தொடர்ந்து மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்ட்டதை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இதில் அவருக்கு 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டள்ள நிலையில், அந்தத் தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-update-conditional-bail-for-mansoor-ali-khan-high-court-297393/