கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது குறித்த வழக்கில், தேர்தல் நீதிபதிகள் வாய்மொழியாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக குற்றம்சாட்டி கூறியதை வைத்து ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்ததற்கு ஒரு வகையில் இந்திய தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று விசாரணையின்போது நீதிமன்றம் வாய்வார்த்தையாக குற்றம்சாட்டியை செய்தியாக வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தேர்தல் ஆணையம் சார்பாக, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை வைத்தபோது உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. மேலும், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இதற்கு நிவாரணமும் வழங்க மறுத்துவிட்டது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையை எதிர்கொள்வதில் மாநில அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த வழக்கு விசாரணையின்போது ஏப்ரல் 26ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வாய்மொழி வழியாக கருத்து தெரிவித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம், நீதிமன்ற நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படும் வாய்மொழி வழியான விசாரணைகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுகளை அல்லது தீர்ப்புகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஊடக நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியது.
“கொரோனா தொற்று அதிகரித்துள்ள இன்றைய நிலைமைக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிய நேரிடும்” என்று உயர் நீதிமன்றம் வாய்மொழியாக தெரித்த கருத்துகளை செய்தியாக வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது கிரிமினல் குற்றத்திற்காக நடவடிக்கை கோரி போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த சர்ச்சைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு “நீதிமன்றம் இருக்கிறது. ஏதேனும் அற்பமான புகார்கள் வந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.” என்று தெரிவித்தது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/covid-19-cases-surge-chennai-high-court-rejects-election-commission-request-to-restrain-media-from-reporting-oral-observations-298094/