சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ .400 க்கும் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ .600 க்கும் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அரசாங்கத்தின் சமீபத்திய முடிவின்படி, தடுப்பூசி தயாரிப்பாளர்களால் உற்பத்தி செய்யப்படும் அளவுகளில் 50 சதவீதம் முன்பே அறிவிக்கப்பட்ட விலையில் வெளிச் சந்தைக்கு வழங்கப்படும். மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இந்த தடுப்பூசி டோஸ்களை வாங்கலாம்.
இந்த நிலையில், 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும்போது தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க முடியும் என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஒரு டோஸ் ரூ. 250 க்கு கிடைக்கும்.
மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான அளவு தடுப்பூசிகளை தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
மீதமுள்ள 50 சதவிகிதம் மத்திய அரசுக்கு வழங்கப்படும். மத்திய அரசு இந்த 50 சதவீத டோஸ்களை மாநிலங்களுக்கு வழங்கும். ஆனால் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்போகிறது என்பதை இதுவரை மத்திய அரசாங்கம் வெளியிடவில்லை.
இந்தியாவின் நோய்த்தடுப்பு திட்டத்தில் தற்போது கிடைக்கும் மற்றொரு தடுப்பூசி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகும். இந்த தடுப்பூசியின் விலை இதுவரை பகிரங்கப்படுத்தப் படவில்லை.
source https://tamil.indianexpress.com/india/covishield-price-rs-400-to-states-rs-600-to-private-hospitals-294294/