தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் அதிமுக அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜய் பாஸ்கர் தொடர்ந்த வழக்கில், கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளுக்காக அரசியல் கட்சிகளும் மக்களும் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் காரணமாக மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற அன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “2 அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும்போது தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாது. கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும். அதனால், வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வேட்பாளர்களின் முகவர்களை அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் மருத்துவக் குழுவை பணியமர்த்த வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் மன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என்று கூறி கடும் அதிருப்தி தெரிவித்தனர். தேர்தலில் அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்தது கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு ஒரு காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் அதை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று நீதிபதிகள் கடுமையாக கடிந்துகொண்டனர்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற அன்று அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பிற்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் எச்சரித்தனர்.
தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையின்போது கரூர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உரிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், தேர்தல் ஆணையம், தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி கூறினார்கள்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/election-vote-counting-will-be-banned-chennai-high-court-warns-election-commission-295968/