இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு அதி தீவிரமாக பரவியது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு புறம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், மறுபுறம் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியும் இறுதி கட்டத்திற்கு நகர்ந்தது.
அரசின் இந்த நடவடிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கொரானா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கியது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மக்கள் கடும் அச்சுறுத்தலை சந்தித்த நிலையில், இந்தியாவின் சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொற்று பாதிப்பின் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து வருகிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் தொற்று பாதிப்பு கனிசமாக உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்று மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், சட்டசபை தேர்தல் காரணமாக தமிழக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், தேர்தல் முடிந்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 6984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9,47,129 பேராக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலிஎண்ணிக்கை 12,945 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட 6984 பேரில், அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேருக்கும், செங்கல்பட்டில் 771 பேருக்கும், கோவையில் 504 பேருக்கும், திருவள்ளூரில் 285 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 204 பேருக்கும், திருப்பூரில் 165 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 49,985 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-update-for-covid-19-all-district-update-291578/