வியாழன், 15 ஏப்ரல், 2021

70 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது; கொரோனா தொற்றுக்கு அவர்களே காரணம் – மமதா

  நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் 100 இடங்களுக்கு மேல் பாஜக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்று மோடி கூறியதற்கு மறுப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தில் பாஜக 70 இடங்களில் கூட வெற்றி பெறாது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் இதுவரை நடைபெற்ற 135 தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக இதுவரை 100 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல்கள் முடியட்டும். பாஜக மொத்தமாக 294 தொகுதிகளில் 70 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று ஜெல்பைகுரியில் நடைபெற்ற பேரணியின் போது கூறினார்.


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் அவர், பாஜகவினர் தான் மேற்கு வங்கத்தில் கொரோனாவை பரப்புகின்றனர் என்ற புகாரை முன்வைத்துள்ளார். இந்த பாஜக தலைவர்கள் வெளியில் இருந்து தொண்டர்களை அழைத்து வருவதால் தான் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்றூ கூறிய அவர், கடந்த ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு பாஜக தொண்டரும் கூட இங்கே வரவில்லை என்று குறிப்பிட்டார்.

பாஜக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசி வருகிறது என்று கூறிய அவர், உள்துறை அமைச்சர் கூறிய தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மேற்கோள் காட்டினார். டார்ஜிலிங்கின் லெபோங் பகுதியில் என்.ஆர்.சி. சட்டம் கொண்டுவரப்படமாட்டாது என்று கூறிய அவர், அசாமில் 14 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களை தடுப்பு முகாமிற்கு அனுப்புவோம் என்று கூறியதை மமதா குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்.ஆர்.சியை நிறைவேற்றவிடமாட்டோம் என்று கூறிய அவர் நீங்கள் அனைவரும் குடிமக்கள் தான். நீங்கள் உங்களின் வாக்குகளை செலுத்துங்கள் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன் என்றார்.மக்களுக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான பாஜகவின் போக்கை கடுமையாக விமர்சனம் செய்த அவர், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கடுமையாக பேசினார்.

கலாச்சாரம், கல்வி, கண்ணியம் மற்றும் மரியாதை அற்றவர்களுக்கு எதிராக களத்தில் நிற்கின்றேன். அவர்களுக்கு ரவீந்திரநாத் தாகூர் பற்றி தெரியாது. ரவீந்திரநாத் போன்று தாடி வைத்திருந்தாலும் கூட ரவீந்திரநாத் தாகூர் போல உங்களால் வர முடியாது என்று பிரதமரை விமர்சனம் செய்தார்.

காவி நிறம் அணிந்திருக்கும் பாஜக தலைவர்களுக்கு அந்நிறத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. அந்த நிறத்தின் மீது பற்று வைத்திருப்பதாக அந்நிற ஆடையை அணிகிறார்கள். ஆனால் காவி நிறத்தின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியுமா? காவி என்பது தியாகம். ஆனால் அவர்களின் ஆசையெல்லாம் ஜனநாயகத்தை கொல்வது தான் என்று தன்னுடைய பிரச்சாரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

Related Posts: