கொரோனா தொற்று நாடு முழுவதும் மீண்டும் அதிக தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் 20ம் தேதி அதிகாலையில் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் பல்வேறு முக்கிய நடைமுறைகளை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரவு நேர ஊரடங்குடன், ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த கடுமையான ஊரடங்கு காலத்தில் எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்படுகிறது, எதெற்கெல்லாம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை கீழே படித்து அறிந்து கொள்ளுங்கள்.
இரவு நேர ஊரடங்கு
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என்பதால் தனியார், பொதுப்பேருந்து வசதிகள், டாக்ஸி, ஆட்டோக்கள் என எதற்கும் அனுமதி இல்லை.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளின் போது முகக்கவசம் அணிதல், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், நெரிசலை தவிர்த்தல் ஆகியவை கண்டிப்பாக பின்பற்றப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.
ஊடகம் மற்றும் பத்திரிக்கைத் துறையினர் இரவிலும் தொடர்ந்து செயல்படலாம்.
தடையின்றி செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படும். இது போன்று இரவு நேரங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு செல்லும் நபர்கள் முறையாக வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதத்துடன் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு செல்லலாம்.
ஐ.டி. மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் பணியாற்றும் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50% பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், வணிக வளாகங்கள், நகைக்கடைகள் மற்றும் ஷோரூம்கள் ஆகியவை ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கோவில் மற்றும் மதம் சார்ந்த விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10ம் தேதிக்கு முன்பு அனுமதி பெற்றிருந்தால் குடமுழுக்கு அல்லது திருவிழாவை 50 முக்கிய நிர்வாகிகளைக் கொண்டு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அத்தகைய நிகழ்வுகள் இது போன்ற சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்படமாட்டாது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஆனால் வழக்கம் போல் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணைய வழி மட்டுமே வகுப்புகள் எடுக்கப்படும்.
நிலையான வழிமுறைகளை பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு அமலுக்குக்கு வருகிறது.
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், பேப்பர் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள் போன்றவை வழக்கம் போல் செயல்படும்.
முழு ஊரடங்கு உள்ள நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களிலும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். அதே போன்று இறப்பு நிகழ்வுகளிலும் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஊடகத்தினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பணியாற்றலாம்.
எதெற்கெல்லாம் அனுமதி இல்லை
மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகளும் செயல்படமாட்டாது.
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற சுற்றுலாதலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
பூங்காக்கள், உயிரியல் பூங்காங்கள், தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அகழ்வைப்பங்களுக்கும் அருங்காட்சியகங்களுக்கும் அனைத்து நாட்களிலும் அனுமதி இல்லை.
கோடை கால முகாம்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sunday-night-lockdown-announced-in-tamil-nadu-293320/