செவ்வாய், 13 ஜூலை, 2021

139 நாட்களுக்கு பிறகு ஜீரோ மரணங்களை பதிவு செய்த சென்னை; குறைந்து வரும் கொரோனா தொற்று

 12/07/2021 No Covid-19 deaths in Chennai after 139 days : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,775 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 47 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில் சென்னை மற்றும் இதர 19 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கிட்டத்தட்ட 139 நாட்களுக்கு பிறகு கொரோனா மரணங்கள் பூஜ்ஜியத்தை அடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு இதுவரை 33,418 நபர்கள் பலியாகியுள்ளனர். மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக அதிக இழப்புகளை சந்தித்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,02,904 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மொத்தமாக 11.5 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்ற நிலையில், மத்திய அரசு இதுவரை 1.6 கோடி தடுப்பூசிகளை மட்டுமே வழங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

சனிக்கிழமை மாலை 5 லட்சம் தடுப்பூசிகளும். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 லட்சம் தடுப்பூசிகளும் தமிழகத்தை வந்தடைந்தன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 82,500 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் துவங்கப்பட்டதால் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர்.

40% புதிய தொற்றுகள் மேற்கு மண்டலத்தில் பதிவானது. கோவை 298 புதிய வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 198 வழக்குகளும் சேலம் மாவட்டத்தில் 175 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை 210 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னையில் புதிதாக 171 வழக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சியில் 108 வழக்குகளும் மதுரையில் 35 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 29 மாவட்டங்களில் புதிய தொற்றுகளைக் காட்டிலும் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/no-covid-19-deaths-in-chennai-after-139-days-322426/

Related Posts: