ஞாயிறு, 25 ஜூலை, 2021

கர்நாடக அரசியலில் லிங்காயத்துகளும், பி.எஸ். எடியூரப்பாவும் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

 24 07 2021 

Lingayats and BS Yediyurappa in Karnataka politics

Lingayats and BS Yediyurappa in Karnataka politics : கர்நாடகாவில் முதல் அமைச்சர் மாற்றப்படுவார் என்ற யூகங்களுக்கு மத்தியில், லிங்காயத்து பிரிவை சேர்ந்த அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு ஆதரவாக அந்த பிரிவை சார்ந்தவர்கள் மட்டும் இல்லாமல், லிங்காயத்து பிரிவில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு லிங்காயத்து மடங்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட மத்திய பாஜக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கடந்த ஒருவாரமாக அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஜூலை 26ம் தேதி அன்று அவர் பதவி விலகுவார் என்று மறைமுகமாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் லிங்காயாத்து மடங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகள் எடியூரப்பாவை சந்தித்து தங்களின் ஆதரவை அளித்ததோடு, அவர் மாற்றப்பட்டால் ஏற்பட இருக்கும் நிகழ்வுகள் குறித்து பாஜகவை எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

பாஜகவிற்கு லிங்காயத்து ஆதரவு எவ்வளவு முக்கியமானது?

கர்நாடகாவில் லிங்காயத்துகள் தனிப்பெரும்பான்மை கொண்ட பிரிவாகும். மொத்த மக்கள் தொகையில் 17% பேர் லிங்காயத்துகள் ஆவார்கள். பெரும்பாலும் வடக்கு கர்நாடகாவில் இவர்கள் உள்ளனர். பாஜக மற்றும் எடியூரப்பாவின் பெரும்பான்மை ஆதரவாளர்களும் இங்கு தான் உள்ளனர். இந்து சைவ பிரிவை சேர்ந்த லிங்காயத்துகள், சமத்துவத்திற்காக போராடிய பசவன்னாவை வணங்குகின்றனர். 224 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 90-100 வரையிலான சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி முடிவுகளை தீர்மானிக்கும் வலுவான சமூகமாக லிங்காயத்து சமூகம் உள்ளது.

கர்நாடக அரசியலில் லிங்காயத்து மடங்களின் பங்குகள்

கர்நாடக மாநிலம் முழுவதும் 500 மடங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை லிங்காயத்து மடங்கள். அதற்பின்னர் வொக்கலிகர்களின் மடங்கள் உள்ளன. தேர்தல் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய காலங்களில் கட்சி பாரபட்சமின்றி பலரும் மடங்களுக்கு செல்வது வழக்கம். மாநிலத்தில் உள்ள மடங்கள் மிகவும் பலம் மிக்கவை. அதிகப்படியாக மக்கள் பின்தொடர்வதாலும், ஒவ்வொரு துணை பிரிவிலும் மத்திய இடம் பிடிப்பதாலும் நேரடியாக அரசியலில் ஈடுபடுகின்றன.

லிங்காயத்து அமைப்பான அனைத்திந்திய வீரசைவ மகாசபை 22 மாநிலங்களில் செயல்படுகிறது. குறிப்பாக லிங்காயத்துகள் அதிகம் உள்ள வடக்கு கர்நாடகாவில் அதிகமாக செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் எடியூராப்பாவிற்கு பின்பு ஒரே அணியாக திரள்கின்றனர்.

தலைமை மாற்றம் குறித்த பேச்சுக்களுக்கு மத்தியில், பல பார்வையாளர்கள் கடந்த நான்கு நாட்களாக முதல்வரை தனிப்பட்ட முறையில் பார்வையிட்டனர். கோட்டூர் வீரஷைவ சிவயோக மந்திரைச் சேர்ந்த ஸ்ரீ சங்கனா பசவ சுவாமி எடியூரப்பாவை பார்வையிட்ட நபர்களில் மிகவும் முக்கியமானவர். தலைமை மாற்றம் தொடர்பாக அவர் பேசிய போது எடியுரப்பாவை அகற்றும் திட்டங்களுக்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் சதி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தும்கூரில் உள்ள சித்தகங்க மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சித்தலிங்க சுவாமி தலைமையிலான, மாநிலத்தின் மற்றொரு முக்கிய லிங்காயத்து தூதுக்குழு ”பணி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்” என்று எடியூரப்பாவை அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசியது.

முன்னாள் முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் போன்ற தலைவர்களை இழிவாக நடத்தியதன் காரணமாக 1990களில் லிங்காயத்துகள் மத்தியில் காங்கிரஸ் தன்னுடைய செல்வாக்கை இழந்த பிறகு, பாஜகவையும், எடியூரப்பாவையும் தொடர்ந்து ஆதரித்தது இந்த பிரிவு.

லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது எப்படி?

1990களின் முற்பாதி வரை, காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக அளவில் லிங்காயத்துகள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினார்கள். அந்த சமயத்தில், கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. 224 தொகுதிகளில் 179 தொகுதிகளில் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. பெரும்பான்மையான லிங்காயத்துகளின் வாக்குகள் வீரேந்திர பாட்டீலால் பெறப்பட்டது. வொக்கலிகா பிரிவினரின் ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் காங்கிரஸின் முடிவு லிங்காயத்து சமூகத்தை வேறு கட்சிக்கு ஆதரவாளர்களாக மாற்றியது. ராம் ஜனமபூமி பிரச்சினைக்காக நடத்தப்பட்ட ரத யாத்திரை காரணமாக கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரங்களுக்கு பிறகு பாட்டீல் அரசை கலைத்து அறிவித்தார் அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி. அதே நேரத்தில் பாட்டீல் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தார். பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு முதல்வரை பதவி நீக்கம் செய்ததாக ராஜீவ் காந்தி அறிவித்தார். இது லிங்காயத்தை காங்கிரஸிலிருந்து விலகிச் செல்ல வழிவகுத்தது. பாஜகவுக்கு ஆதரவாக அது மாறியது.

லிங்காயத்துகளின் ஆதரவை பாஜக பெற்றது எப்படி?

ராஜீவ் காந்தி, பாட்டீல் அரசை கலைத்ததை தொடர்ந்து அடுத்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக லிங்காயத்து பிரிவினர் வாக்களித்தனர். 1994ல் நடைபெற்ற தேர்தலில் வெறும் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது காங்கிரச். பெரும்பான்மையான வாக்குகள் பாஜகவிற்கு சென்றது. வெறும் 4% ஆக இருந்த வாக்குவங்கி 17% ஆக பாஜகவிற்கு அதிகரித்தது. லிங்காயத்து முகமாக எடியூரப்பா மாநில அரசில் வளர துவங்கினார். எடியூரப்பாவின் மூலம் லிங்காயத்தின் ஆதரவை அதிகரித்தது பாஜக.


2013ம் ஆண்டு எடியூரப்பா மற்றும் லிங்கயாத்து பாஜகவிற்கு எத்தகைய சேதத்தை ஏற்படுத்தியது?

எடியூரப்பா மூலம் லிங்காயத்துகளின் வாக்குகளை அறுவடை செய்த பாஜக 2013ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை கட்சியில் இருந்து பாஜக நீக்கியது. பிறகு எடியூரப்பா கர்நாடகா ஜனதா கட்சி என்று ஒன்றை துவங்கினார். லிங்காயத்துகளின் வாக்குகள் பாஜக மற்றும் எடியூரப்பாவின் கே.ஜே.பிக்கு இடையே பிரிந்தது.

2008ம் ஆண்டு 110 இடங்களில் வெற்றி பெற்றது பாஜக. 2013ம் ஆண்டு 40 தொகுதிகளாக குறைந்தது. அதன் வாக்கு வங்கிகளும் 33.86%ல் இருந்து 19.95% ஆக சரிந்தது. பாஜகவில் மீண்டும் எடியூரப்பா இணைந்த பிறகு 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை தேடித்தந்தது. 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, லிங்காயத்துகளின் வாக்குகளை பெறவும், கட்சியில் முக்கியமான பதவிகளில் லிங்காயத்துகள் இல்லாத விவகாரத்தை களையவும் காங்கிரஸ் முயற்சிகள் மேற்கொண்டது. கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தின் ஆதரவைப் பெறும் முயற்சியில், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா 12 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணாவின் படங்களை பசவ ஜெயந்தி தினத்தன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிறுவ உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பாட்டீல் அரசுக்கு பிறகு குறைந்து போன காங்கிரஸின் செல்வாக்கை பெற காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. ஆனால் காங்கிரஸால், எடியூரப்பாவிற்கு இணையாக ஒரு தலைவரை கண்டடைவதில் ஏமாற்றம் அடைந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/how-important-are-lingayats-and-bs-yediyurappa-in-karnataka-politics-325776/