செவ்வாய், 20 ஜூலை, 2021

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு புகார்… 34 பொது மேளாளர்கள் பணியிட மாற்றம்… சஸ்பெண்ட் செய்யக் கோரும் முகவர்கள்

aavin, aavin general managers transfer, kandhasamy ias, ஆவின் பொது மேலாளர்கள் பணி இடமாற்றம், ஆவின், கந்தசாமி ஐஏஎஸ், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், பொன்னுசாமி, ponnusamy, tamil nadu, tamil nadu milk dealers

தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் 34 பொது மேலாளர்களை ஒரே நேரத்தில் பணி இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்ற ஐஏஎஸ் அதிகாரி கந்தசாமி. ஆவின் நிறுவனத்தில் ஒரே நேரத்தில் 34 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி ஆவின் நிறுவனத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் கோடிக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. அதில் சம்பந்தப்பட்டுள்ள ஆவின் பொது மேலாளர்கள் மீது விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்தில் முந்தைய ஆட்சிக் கோடிக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக எழுப்பியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆவின் நிறுவனத்தின் 34 பொது மேலாளர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்ததற்கு ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதில், இது குறித்து சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறையை சீரழித்து, சின்னாபின்னமாக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆசியோடு ஆவின் நிறுவனத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றதாக தகுந்த ஆதாரங்களோடு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்க கோரி புதிய அரசிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில் ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த நந்தகோபால் அவர்கள் கடந்த மாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு. கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை தமிழக அரசு நியமனம் செய்தது. 

புதிய நிர்வாக இயக்குனராக திரு கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் பொறுப்பேற்றதும் ஆவினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து அதில் முதற்கட்டமாக ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 18கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தி வந்த C/F ஏஜென்ட் முறையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடைபெற்ற பணி நியமனங்களை ரத்து செய்தும், அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஆவினில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்களுக்கு காரணமாக இருந்து முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்ட விற்பனை பொது மேலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட ஊழல் அதிகாரிகளான பொதுமேலாளர்களை பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வராது என்றும் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்டு வந்த அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஆவின் நிர்வாக இயக்குனர் திரு கந்தசாமி ஐஏஎஸ் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை முன் வைத்தோம்.

இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34பொது மேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து ஜூலை 17ம் தேதி உத்தரவிட்டுள்ள நிர்வாக இயக்குனர் கந்தசாமிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரம் ஆவினில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட முறைகேடுகளில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர், “முன்னாள் அமைச்சர் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி தீபாவளிக்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக பெற்றுள்ளார்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பால் முகவர்கள் ஆவினில் கோடிக் கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமியிடம் பேசினோம். அது என்ன C/F ஏஜெண்ட் முறை ரத்து, எப்படி கோடிக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறுகிறீர்கள். இந்த பொது மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னணி என்ன, அவர்களை ஏன் நீங்கள் சஸ்பெண்ட் செய்யக் கோருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். நமது கேள்விக்கு சு.ஆ.பொன்னுசாமி விரிவாக பதிலளித்து கூறியதாவது: “2000 ஆண்டுக்கு முன்னாடி வரைக்கும் ஆவின் எங்களை மாதிரி டீலர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தது. 2000க்கு பிறகு விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று WSD (Whole Sale Distributors) முறையை கொண்டு வந்தார்கள். அதில முதலில் ஒரு 34 பேர் ஏஜெண்ட்கள் இருந்தார்கள். அவர்களுடன் நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் என்று இருந்தார்கள். அதனால், நிறுவன வளரவில்லை. எங்களுடைய அமைப்பு 2008ல் ஆரம்பித்தோம். நாங்கள் 2000 ஆண்டுக்கு முன்னாடி இருந்த அதே நிலை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு தொடர்து கோரிக்கை கொடுத்து வந்தோம்.

பிறகு, ஐஏஎஸ் அதிகாரி சுனில் பாலி வால் ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது அந்த 34 பேருடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி, 1000 லிட்டர் விற்பனைக்கு எடுக்கக் கூடிய யாராக இருந்தாலும் 2 நாள் பணம் டெபாசிட் 2.25 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு Whole Sale Distributor ஆகலாம்னு ஒரு உத்தரவு போட்டார். அபோது ஒரு 150 பேர் WSD ஆக வந்தார்கள்.

நாளடைவில், இந்த WSDகள் ஒரு லிட்டருக்கு 50 காசு லஞ்சம் கொடுக்க வேண்டும்னு எழுதப்படாத சட்டமாக கொண்டுவருகிறார்கள். அதனால், இந்த 150 பேரில் யார் யார் கொடுக்க முடியுமோ அவர்களால்தான் அங்கே இருக்க முடியும் என்று ஆனது. அதனால், ஏற்கெனவே அங்கே செல்வாக்கு பெற்றிருந்த அந்த 34 பேர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள். புதிதாக WSD ஆக வந்தவர்களுக்கு தாமதமாக பால் ஏற்றி அனுப்புவது என்று இருந்தார்கள். மனரீதியாக தொந்தரவு அளிப்பது என்று இருந்தார்கள். அதனால், 150 என்ற WSD எண்ணிக்கையில் பாதியாக குறைந்தார்கள்.

அதற்கு பிறகு, சுனில் பாலிவால் போய் ஆவின் நிர்வாக இயக்குனராக காமராஜ் வந்தார். அமைச்சரும் ராஜேந்திர பாலாஜியும் கூட்டு. இந்த WSDகளில் 34 பேர் தான் பணம் தருகிறார்கள். WSDகளின் எண்ணிக்கையும் 51 ஆக குறைந்தது. இதில் ஆள் அதிகமாக இருந்தால் பணம் வாங்க முடியவில்லை என்று அதை சுறுக்கி விட்டால் பணம் எளிதாக வசூலிக்கலாம் என்று 2019ம் அண்டு ஒரு உத்தரவு போடுகிறார்கள். அதில்தான் இந்த C/F ஏஜெண்ட் என்ற முறையைக் கொண்டுவருகிறார்கள். அதாவது Carry Forward என்ற முறையைக் கொண்டுவருகிறார்கள்.

இந்த C/F ஏஜெண்ட் என்ற முறையைக் கொடுவந்து அவர்களுக்கு 75 காசு ஆவினில் கூடுதலாக கமிஷன் கொடுக்கிறார்கள். ஏற்கெனவே, WSDகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2 கமிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, லாபம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த 2 ரூபாய் லாபத்தைதான் WSDகள், டீலர்கள், ரிடெய்லர்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். இந்த சூழலில்தான் இந்த C/F ஏஜெண்ட்களுக்கு கூடுதலாக 75 காசு கமிஷன் தருவது வருகிறது.

C/F ஏஜெண்ட்கள் என 11 பேர் நியமிக்கப்படுகிறார்கள். அந்த 11 பேரும் ஏற்கெனவே WSDகளாக இருந்த 51 பேரில் அனுசரனையாக இருந்தவர்களைத்தான் நியமனம் செய்தார்கள். இதில் C/F ஏஜெண்ட்களின் பங்களிப்பு என்று பார்த்தால் இவர்கள் ஆவின் உடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள். இந்த 11 பேரில் 5 பேர் 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

ஏற்கெனவே இருந்த WSD முறையை மாற்ற வேண்டும் என்றால் ஒரு உயர் மட்டக் குழு அமைத்து பிறகுதான் மாற்ற வேண்டும். ஆனால், காமராஜ் நிர்வாக இயக்குனராக இருந்தபோது, செப்டம்பர் 15, 2019ல் திடீரென WSD முறையை மாற்றி C/F ஏஜெண்ட் முறையைக் கொண்டு வருகிறார்கள். 10 நாட்களுக்கு முன்பு முன் தேதியிட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது அந்த உத்தரவை வெளியிடுகிறார்கள். 11 பேரை C/F ஏஜெண்ட் என்று நியமனம் செய்கிறார்கள். இதனால், ஒரு நாளைக்கு ஆவினுக்கு 5 லட்சம் இழப்பு. ஏனென்றால், இவர்களின் பங்களிப்பு என்று எதுவுமே கிடையாது. அவர்களுடைய வேலை WSDகளிடம் இருண்து பணம் வாங்கி கட்டுகிற வேலைதான். அதாவது ஒரு கேஷியர் வேலைதான் பார்க்கிறார்கள். ஆவின் இந்த 11 பேர் பேரில்தான் பில் போடும். ஆனால், இதற்கு முன்பு WSDகள் பேரில்தான் பில் போடுவது பணம் கட்டுவது என்று இருந்தது.

C/F ஏஜெண்ட்கள் எதுவுமே செய்யாமல் அவர்கள் பேரில் பில் போட்டுக்கொண்டிருந்தார்கள். இதனால், ஆவினுக்கு ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தோம். ஆவின் நிர்வாக இயக்குனராக காமராஜுக்கு பிறகு, வள்ளலார் வந்தார், நந்தகோபால் வந்தார் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. ஆவினில் பொது மேலாளராக இருந்த ரமேஷ் குமார் என்பவர்தான் ராஜேந்திர பாலாஜியுடன் கொடுக்கல் வாங்கலில் இணக்கமாக இருந்தார்.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு மனு கொடுத்தோம். சுனில் பாலி வால் வரைக்கும் நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஆவின் நிறுவனம் அவருக்குப் பிறகு, காமராஜ் ஐஏஎஸ் வந்த பிறகு 300 கோடிக்கு மேல் நட்டத்தில் போகிறது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரும் தற்போதைய முதலமைசராக உள்ள ஸ்டாலினை நாங்கள் அறிவாலயத்தில் சந்தித்து இது தொடர்பாக நீங்கள் சிபிஐ விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தோம். மற்ற எல்லா எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து மனு கொடுத்தோம். கடந்த தேர்தலில், விருதுநகரில் பேசும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆவின் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று பேசினார்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு, அமைச்சரை சந்தித்து முறையிட்டோம். 2019-2020 ஆண்டுக்குள் மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. அதற்கு உடந்தையாக இருந்த 2 பொது மேலாளர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், பொது மேலாளர் ரமேஷ்குமார் தொடர்ந்து இருந்தார். ஆவின் பணி நியமனங்களில் பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் செய்ததாக புகார்கள் உள்ளது.

இந்த சூழலில்தான், கந்தசாமி ஐஏஎஸ் ஆவின் நிர்வாக இயக்குனராக வந்ததும் இந்த C/F ஏஜெண்ட் முறையை ரத்து செய்தார். பழைய WSD முறையே தொடரும் என்று உத்தரவிட்டார். செப்டம்பர், 2019க்கு முன்பு இருந்த WSDகள் தொடர்வார்கள் என்று உத்தரவிட்டார். அதே போல, ஒரு லிட்டருக்கு 75 காசு கமிஷன் அவர்களுக்கு போகாது. இதனால், ஆவினுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை கந்தசாமி தடுத்துள்ளார்.

அதோடு, கந்தசாமி ஐஏஎஸ், ஆவின் நிறுவனத்தில் இருந்து 34 பொது மேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்துள்ளார். இவர்கள் இங்கே செய்த முறைகேடுகளை வேற இடத்திலும் செய்வார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்போது அவர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தால்தான் விசாரணை சரியாக நடைபெறும். அதனால், இந்த 34 பேர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டும். ஆவின் தணிக்கைத் துறை முறைகேடு விவரங்களை தெரிவித்திருக்கிறது. தீபாவளிக்கு உயர் அதிகாரிகளுக்கு லெதர் பேக் வாங்குவதற்கு 49 லட்சம் ரூபாய் கணக்கு காட்டியுள்ளார்கள். அதை யாருக்கு கொடுத்தார்கள் என்ற ஆதாரம் இல்லை. விளம்பரம் கொடுத்ததில், பார்லர் அமைத்ததில் என எல்லாவற்றிலும் ரமேஷ்குமார் பங்கு உள்ளது.

அதனால், ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரிடமும் ஆவினுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கான முறைகேடுக்கு ரெக்கவரி செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரலாம் என்று இருக்கிறோம்.

தற்போதைய அரசின் நடவடிக்கை திருப்தியாகத்தான் உள்ளது. ஆனால், 100 சதவீதம் திருப்தி என்று சொல்லமாட்டோம். புதிய அரசு ஆவின் நிர்வாக இயக்குனரை மாற்றியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கலெக்டராக இருந்த கந்தசாமி ஐஏஸ் பற்றி எல்லோரும் நல்லவிதமாக சொல்கிறார்கள். அவர் தற்போது நல்ல நடவடிக்கை எடுத்துள்ளார். அவரை முறை சந்தித்து பேசியிருக்கிறோம். ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளையும் கூறினோம். அவர் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு கண்டிப்பாக பரிசீலனை செய்வதாக சொல்லியுள்ளார். அவரை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாதிரி நாசரும் கந்தசாமி ஐஏஎஸ்க்கு செயல்பட சுதந்திரம் கொடுக்க வேண்டும். தவறு செய்தவர்களை பணியிடமாற்றம் செய்வது என்பது தண்டனை ஆகாது. அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறுகிறோம்.” என்று பொன்னுசாமி கூறினார்.

ஆவின் நிறுவனத்தில் ஒரே நாளில் 34 பொது மேலாளர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டது குறித்தும் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமியிடம் பேசினோம்.
ஆவின் நிறுவனத்தில் கோடிக் கணக்கில் முறைகேடுகள் நடந்திருக்கிறது, இந்த பொது மேலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு பதிலாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் முறையான விசாரணை நடக்கும் என்று முகவர்கள் கூறுகிறார்கள். அவர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணம் முறைகேடுதான் காரணமா என்று கேள்வி எழுப்பினோம். இது குறித்து விளக்கமாக பேசிய ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி, “குறிப்பாக ஒன்றைக் குறிப்பிட்டு அவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி இடமாற்றத்தைப் பொறுத்தவரை, நாம் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. அதனால், கொள்முதலிலும் மார்க்கெட்டிங்கிலும் திறமையாக நிர்வாகத்தை எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உள்ளது. இவர்கள் எல்லாம் தொடர்ந்து ஒரே இடத்தில் 2-3 ஆண்டுகளாக இருக்கிறார்கள். ஒரே இடத்தில் இருக்கும்போது, அவர்களும் ஒரு சலிப்பூட்டும் விதமாக இருப்பார்கள். பணி இடமாற்றம் என்பது தண்டனை அல்ல.
அவர்கள் மீது சின்ன சின்ன எழுதப்படாத குறைகள் சொன்னார்கள். அவர்களுக்குள் சில பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு டிரான்ஸ்ஃபர் கொடுத்தால் அவர்கள் மன ரீதியாக சலிப்பாக வேலை செய்வதற்கும் ஒரு மாற்றம் இருக்கும் என்று பணி இடமாற்றம் செய்தோம்.” என்று கூறினார்.

பால் முகவர்கள் சங்கம் சார்பில் எதுவும் புகார்கள் எழுத்துப் பூர்வமாக கொடுக்கப்படவில்லையா என்று கேள்விக்கு, பதிலளித்த கந்தசாமி, “ஒரு அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் அதற்கு என்று விதிமுறைகளும் முறையும் இருக்கிறது. ஒருவர் மீது புகார் வருகிறது என்றால் விசாரணை செய்ய வேண்டும் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். அதற்கு ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும். விசாரணை அதிகாரி அறிக்கை அளிக்க வேண்டும். இது காலதாமதமாக ஆகும். அதே போல, தவறு செய்பவர்களை யாரும் காப்பாற்ற முயற்சி செய்ய முடியாது. ஆனால், இவர்கள் சொல்கிற புகார் என்பது, காலம் காலமாக எல்லோர் மீதும் புகார் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லார் மேலயும் புகார் இருக்கிறது. இப்போது மாற்றப்பட்ட, மாற்றப்படாத பொது மேலாளர்கள் மீது இந்த புகார்களைத் தாண்டி தணிக்கை துறை அறிக்கையில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதற்கு என்று தனியாக விசாணை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது ஒரு நிர்வாகத்தில் ஒருவர் மீது புகார் தெரிவித்து குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்காமல் இல்லை. நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்போது நிறைய புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, சில அலுவலர்கள் மீது மீண்டும் மீண்டும் புகார் வந்துகொண்டிருக்கிறது. அதை நாங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.

C/F ஏஜெண்ட் முறை ரத்து செய்தது குறித்து கூறிய ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி, “அது தேவையில்லாத ஒரு செலவினம். 51 WSDகளில் 11 பேர் தேர்வு செய்து C/F ஏஜெண்ட் என நியமித்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு லிட்டருக்கு 75 காசு கமிஷன். ஆவின்ல 2019ல் WSDகளிடம் இருந்து பணம் வாங்கும்போது ஏதோ செக் பவுன்ஸ் ஆகியிருக்கும் போல இருக்கிறது. அந்த செக் பவுன்ஸ் செலவு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1.2 கோடி ரூபாய் செலவு ஆகியிருக்கும் போல. அதனால், 1.2 கோடி ரூபாய் செலவை தவிர்க்க நாம் 13 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவு செய்ய வேண்டும் என்பது நியாயமில்லாதது. அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், பணம் வசூல் செய்து C/F ஏஜெண்ட்கள் செலுத்தி இருக்கிறார்கள். WSDகளுக்கும் எந்த விதமான நேரடி தொடர்பு இல்லாமல் C/F ஏஜெண்ட்கள் பணத்தை வசூலித்து கட்டி வந்திருக்கிறார்கள். அப்படி 11 C/F ஏஜெண்ட்கள் இருந்துள்ளார்கள். ஆனால், இன்றைக்கு இந்த நடைமுறை தேவை இல்லை. இன்றைக்கு பணம் செலுத்துவது, பேங்கிங் எல்லாம் நிறைய மாறி இருக்கிறது. இன்றைக்கு அவர்கள் பணம் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. இப்போது அவீன் தாராளமான நிர்வாகத்தை நகர்ந்திருக்கிறது. இதற்கு முன்பு இருந்த ஆவின் செட் அப் இன்றைக்கு இருக்கிற போட்டி சூழலில் வெற்றி பெறாது. அதனால், C/F ஏஜெண்ட் முறை அவ்வளவு செலவு செய்து அவர்களின் பணி தேவையில்லை. அதற்கு நாங்கள் ஒரு மேற்பார்வை செய்ய ஒரு அதிகாரியைப் போட்டு கண்காணித்தால் போதும். அதனால், ஒரு 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை செலவு ஆகும்.

அதனால்தான், இந்த C/F ஏஜெண்ட் முறையை ரத்து செய்து ஏற்கெனவே இருந்த WSDக்கள் உடன் நேரடியாக தொடர்புகொள்ளும் முறையைக் கொண்டு வந்துள்ளோம்” என்று கூறினார்.

ஆவின் நிறுவனதின் புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ள கந்தசாமி ஐஏஎஸ், ஆவின் நிர்வாகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று பால் முகவர்கள் தொழிலாளர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aavin-md-kandasamay-ias-takes-action-34-general-managers-transfer-324337/