இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு பார்க்கும் மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொலைபேசியை கண்காணித்து வருகின்றனர் என சர்வதேச தொண்டு நிறுவனமான அம்னேஸ்டி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த NSO(Niv,Shalev and Omri) என்ற நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருள் தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பமானது பிரத்யேகமாக உளவு பார்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று. இந்த சாப்ட்வேரை நாம் உபயோகப்படுத்தும் தொலைபேசிகளில் ஊடுருவச் செய்து பயனர்களின் தகவல்களை திருட முடியும், அதன் மூலம் அவர்களை உளவும் பார்க்க முடியும்.
இந்த மென்பொருள் மூலம், ஆண்ட்ராய்டு தொலைபேசி மட்டுமல்லாமல் IOS தொலைபேசிகளிலும் உள்ள தகவல்களை திருட முடியும். இந்த தரவுகள் திருடப்படுகிறது என்று நமக்குத் தெரியாமலேயே இதை செய்யமுடியும் என்றும் கூறுகின்றனர்.
ஏற்கனவே உளவு பார்க்கும் மென்பொருளான பெகாசஸின் மென்பொருளை இணையத்தில் விற்பனை செய்வது, ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு ஒப்பானது என்று குற்றம் சாட்டி, வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்காவில் NSO குழுமத்திற்கு எதிராக கடந்த வருடம் வழக்கு ஒன்றை பதிவு செய்தது.
அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் NSO குழுமத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து இந்த வழக்கில் வாதாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெகாசஸ் மென்பொருளின் உதவியினால் கண்காணிக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளதாக ஆங்கில நாளேடான தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் இடம்பெற்றிருப்பதாக அந்த நாளேடு கூறியுள்ளது.
கீழ்க்கண்ட பெயர்களில் உள்ள பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியவர்களின் தொலைபேசியை கண்காணித்து வருவதாக சர்வதேச இணையதளங்கள் அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளன.
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையை சேர்ந்த ஷிஷிர் குப்தா, பிரசாந்த் ஜா, ராகுல் சிங் அவுரங்கசீப் நக்ஷ்பாண்டி, சைக்கத் தத்தா, விஜயா சிங் (தி இந்து), முசாமில் ஜலீல், (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) ரித்திகா சோப்ரா, (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) சுஷாந்த் சிங், (முன்னாள் பத்திரிக்கையாளர்) சந்தீப் உன்னிதன் (இந்தியா டுடே) சித்தார்த் வரதராஜன், தி வயரின் இணை நிறுவனர், சுவாதி சதுர்வேதி, தி வயர் தேவி ரூபா மித்ரா, தி வயர் ரோகிணி சிங், தி வயர், எம்.கே. வேணு, தி வயர், ஜே கோபிகிருஷ்ணன், தி பயனியர் பத்திரிகை, பரஞ்சோய் குஹா தாகூர்த்தா, பத்திரிகையாளரும் நியூஸ் கிளிக் இணையத்தின் ஆலோசகருமான மனோரஞ்சனா குப்தா, தலைமை ஆசிரியர்-பிரான்டியர் டி.வி. ஷபீர் ஹுசைன் புச், பிரீலான்ஸ் பத்திரிகையாளர் இப்திகார் கிலானி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா, பிரீலான்ஸ் பத்திரிகையாளர் மற்றும் செய்தி தொகுப்பாளர் பிரேம் சங்கர் ஜா- இந்திய பொருளாதார நிபுணர், பத்திரிகையாளர் சந்தோஷ் பாரதியா – பத்திரிகையாளரும் முன்னாள் எம்.பியும் தீபக் கிட்வானி, பிரீலான்ஸ் பத்திரிகையாளர் பூபிந்தர் சிங் சஜ்ஜன், பஞ்சாபி பத்திரிகையாளர் ஜஸ்பால் சிங் ஹெரன், பஞ்சாபி பத்திரிகையாளர் ஹசன் பாபர் நேரு – வக்கீல் மற்றும் ஆர்வலர் ஜே.என்.யூ கல்லூரி அறிஞர் உமர் காலித்- தற்போது யுஏபிஏ வழக்கின் கீழ் கீழ் சிறையில் உள்ளார். ரோனா வில்சன், யுஏபிஏ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட ஆர்வலர் ரூபாலி ஜாதவ், யுஏபிஏ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார் பட்டம் பிரசாத் சவுகான்- ஆர்வலர் லக்ஷ்மன் பந்த் – ஆர்வலர்.
இந்திய ஊடகங்கள் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களான தி கார்டியன் வாஷிங்டன் போஸ்ட் உட்பட 14 சர்வதேச பத்திரிகைகளும் ஒன்றிணைந்து நடத்திய விசாரணையில் 10 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் செயல்பாடுகள் நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உட்பட பலருடைய தொலைபேசி கண்காணிக்க படுவதாக கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக தமிழகத்தைச் சேர்ந்த சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் முன்பு கைது செய்யப்பட்ட, நீதிமன்ற உத்தரவு மூலம் விடுதலையான சமூக செயற்பாட்டாளர் முருகன் காந்தியின் தொலைபேசியும் பெகாசஸ் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.