வெள்ளி, 30 ஜூலை, 2021

இலங்கையில் தாக்கப்பட்ட இந்தியத் தலைவர்

 

34 ஆண்டுகளுக்கு முன்பு, ஈழத்தமிழர் நலன் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, இலங்கை சென்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அந்நாட்டு கடற்படை வீரர் ஒருவரால் தாக்கப்பட்டார். உலகை அதிரச் செய்த அந்த சம்பவத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

1987, ஜூலை 30 தலைநகர் கொழும்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபோது அப்படி ஒரு தாக்குதலை, வேறு ஒரு நாட்டின் தலைவர் எதிர்கொண்டிருந்தால், அடுத்த நொடியே இலங்கை என்ற பெயரே இந்திய பெருங்கடலில் இல்லாமல் போயிருக்கும். ஆனால், அந்த தாக்குதலை பிரதமர் ராஜீவ் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அதற்காகவெல்லாம், இந்திய படைகள் சும்மா இருந்துவிடவும் இல்லை.

இலங்கை கடற்படை வீரர் ஒருவரால் இந்திய பிரதமர் துப்பாக்கிக் கட்டையால் தாக்கப்பட்டார் என்ற தகவல் வெளியான நொடியே, இந்திய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. ஆனால், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியதுடன், வருத்தமும் தெரிவித்தார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அத்துடன், அந்த கடற்படை வீரர் விஜிதா ரோஹண விஜிமுனே, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வீரர் மூளைக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் விளக்கமளித்தார் ஜெயவர்த்தனே. ஆனாலும், இலங்கை அரசு உலகரங்கில் கடும் கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஒரே ஒரு கேள்விதான் பிரதானமாக இருந்தது. ராஜீவ் காப்பாற்றப்பட்டார் என்ற போதிலும், ஏன் இந்த கொலை முயற்சி நடந்தது?

1983க்கு பிறகு, இலங்கை தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. சொல்லொணா துயரங்களை அனுபவித்தனர் தமிழர்கள். 1987 ஜுன் மாதம், இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள், மிகவும் கவலையளித்தன. இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டு, அங்குள்ள தமிழர்களை துன்புறுத்தின. மனித உரிமைகள் மீறப்பட்டன. உணவுப் பொருட்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டன. ஆனால், மனித நேயத்துடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி.

அதே ஆண்டு, ஜுன் 2 ஆம் தேதி இந்தியாவில் இருந்து கப்பல்களில் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் கப்பல்களை தடுத்து நிறுத்தியது இலங்கை கடற்படை. இலங்கையின் எதிர்ப்பையும் மீறி, தமிழர்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார் ராஜீவ். இதனால், மிரண்டு போன இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, போரை நிறுத்த ராஜீவின் எந்த திட்டத்திற்கும் ஆதரவளிக்க முன் வந்தார். இதனை தொடர்ந்து ராஜீவ் -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோரே அரை மனதுடன் தான் ஒப்புக்கொண்டிருந்தனர். இதே நிலை தான், சிங்கள மக்களிடமும் இருந்தது. ஆனால், அப்போதைய தமிழநாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார். பெரும்பாலான தமிழ்நாட்டு தலைவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. ஆனால், இலங்கையை இந்தியாவிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர் புத்த பிக்குகள்.

இந்த நிலையில் தான், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொழும்பு சென்றார் ராஜீவ்காந்தி. இலங்கை கடற்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வெள்ளைச் சீருடை அணிந்த 72 கடற்படை வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் ராஜீவ் நடந்துவரத் தொடங்கினார். அப்போது, திடீரென ராஜீவ் காந்தியை நோக்கி தனது துப்பாக்கியை ஓங்கினார் ஒரு கடற்படை வீரர். அவருடைய நிழலை வைத்து சட்டென்று சுதாரித்துக்கொண்ட ராஜீவ், தாக்குதலில் இருந்து மிக லாவகமாகத் தப்பினார். இதனால் அவரது பின்னந்தலையில் விழவேண்டிய அடி தோளில் விழுந்தது. அந்த அடியால் சற்றே தடுமாறிப் போனார் ராஜீவ் காந்தி.

உலகமே அதிர்ந்தாலும் ராஜீவ் அதிரவில்லை. அவர் இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தவும் இல்லை. இப்போது ராஜீவ் காந்தி இல்லையென்றாலும், 34 ஆண்டுகளை கடந்தும் இருநாட்டு மக்களால் மறக்க முடியாத ஒரு சம்பவமாகிவிட்டது இது.

 

கட்டுரையாளர்: வரலாறு சுரேஷ்

source news 7