24 07 2021 India news in tamil: இந்தியாவில் “பெகாசஸ்” ஒட்டுக்கேட்பு விவகாரம் விஸ்வரூபமெடுதுள்ள நிலையில், போன்கள் ஒட்டுக்கேட்க்கப்பட்ட அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொழிலதிபர் அனில் அம்பானி, முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் ஏஜென்சியில் உள்ள இரண்டு மூத்த அதிகாரிகள் (முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மற்றும் முன்னாள் கூடுதல் இயக்குனர் ஏ.கே. சர்மா) ஆகியோர் பயன்படுத்திய தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுகேட்கப்பட்டதாக “தி வயர்” செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள “தி வயர்” செய்தி நிறுவனம், உலகளாவிய விசாரணைத் திட்டத்தில் (இன்வெஸ்டிக்டிவ்) அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் பிரான்ஸ் பொது நல குழுவுடன் கைகோர்த்துள்ள 16 ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும்.
தற்போது தொழிலதிபர் அனில் அம்பானி, முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா உட்பட பல அதிகாரிகள் குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பட்டியலில் அனில் அம்பானியின் ஊழியர் டோனி ஜேசுடான் மற்றும் பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனின் இந்திய பிரதிநிதி வெங்கட ராவ் பொசினா ஆகியோரும் அடங்குவர் என்றும், முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் குடும்ப உறுப்பினர்களும் இந்த பட்டியலில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் தொலைபேசி எண் ஒட்டுக்கேட்க காரனாக, கடந்த 2018ம் ஆண்டில் சிபிஐ அதிகாரிகள் மத்தியில் பனி போர் நிலவி வந்தது. இதில் இயக்குனர் அலோக் வர்மா தனது உதவியாளர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தார். எனவே அக்டோபர் 23 அன்று இரு அதிகாரிகளும் பணியில் இருந்து விடுக்கப்பட்டனர். இதனால் அஸ்தானா மற்றும் ஏ கே ஷர்மா ஆகியோரின் தொலைபேசி எண்கள் பட்டியலில் வைக்கப்பட்டது. மேலும் அக்டோபர் 23 ஆம் தேதி பிறகு தான் இவரது பெயர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக ‘தி வயர்’ கூறியுள்ளது. அதோடு வர்மாவுடன், அவரது மனைவி, மகள் மற்றும் மருமகனின் தனிப்பட்ட தொலைபேசி எண்களும் இறுதியில் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்றும், இந்த ஒரு குடும்பத்திலிருந்து மொத்தம் 8 எண்கள் ஒட்டுக்கேட்டப்பட்டது என்றும், ‘தி வயர்’ குறிப்பிட்டுள்ளது.
இந்த எண்கள் சில மாதங்களில் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ள ‘தி வயர்’ செய்தி நிறுவனம் பிப்ரவரி 2019ம் ஆண்டு வர்மா பணியில் ஒய்வு பெற்ற போது அரசு அவர் மீது பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என குறிப்பிட்டுள்ளது.
பெகாசஸ் திட்ட ஊடகங்கள் “தொலைபேசியின் தரவின் தொழில்நுட்ப பரிசோதனையால் மட்டுமே ஹேக் செய்வதற்கான முயற்சி அல்லது வெற்றிகரமான சமரசம் நடந்ததா என்பதை நிறுவ முடியும். ஆனால் பட்டியலில் ஒரு எண் இருப்பது அந்த நபர் கண்காணிப்புக்கான சாத்தியமான நபராக அடையாளம் காணப்பட்டதற்கான தெளிவான அறிகுறியாகும்” என கூறியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/india-news-in-tamil-anil-ambani-cbi-ex-director-alok-verma-names-are-in-new-pegasus-snooping-list-325578/