19 07 2021 Project Pegasus target list : இரண்டு இந்நாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர் ஒருவர் உட்பட மூன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ஆசிரியர்கள் பெயர்கள் பெகசாஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட 40 பத்திரிக்கையாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத ஏஜென்ஸி மூலம் இவர்களின் அலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக தி வையர் ஞாயிற்றுக் கிழமை அன்று செய்தி வெளியிட்டிருந்தது. பாரீஸ் நகரை தலைமையகமாக கொண்ட ஃபோர்பிடன் ஸ்டோரிஸ் மூலம் பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த 17 உலகளாவிய செய்தி நிறுவனங்களின் அறிக்கையில் ஒரு அங்கமாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக செய்திகளை அளிக்கும் துணை ஆசிரியர் முஸாமில் ஜலீல் மற்றும் தேர்தல் ஆணையம், கல்வி அமைச்சகம் தொடர்பான செய்திகளை அளிக்கும் மூத்த துணை ஆசிரியர் ரித்திக்கா சோப்ரா ஆகியோரின் எண்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
2018 – 2019 ஆண்டுகளுக்கு இடையில், குறிப்பாக 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு வரை இவர்களின் பெயர்கள் இலக்கு பட்டியலில் இடம் பெற்றிருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், , அப்போதைய தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் மீது வைக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அவர் எழுதினார்.
இந்த பணிகளுக்காக அவருக்கு 2020ம் ஆண்டு International Press Institute (India) விருது வழங்கப்பட்டது. இந்த பட்டியலில், அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான செய்திகளை அளித்த சுஷாந்த் சிங் பெயரும் இடம் பெற்றிருந்தது. துணை ஆசிரியராக பணியாற்றிய அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
எங்கள் பத்திரிகையாளர்களை கண்காணிப்பதற்கான சாத்தியமான இலக்கு சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுவதாகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸின் தலைமை ஆசிரியர் ராஜ் கமல் ஜா கூறினார். “இந்த கோட்பாடுகள், பத்திரிகைகளின் சுதந்திரம், கவுரவம் மற்றும் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை என்று உச்சநீதிமன்றத்தால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டவை. இந்த கொள்கைகளை பாதுகாக்க இந்தியன் எக்ஸ்பிரஸ் குழு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியராக உள்ள ரௌலா கலாஃப் உள்ளிட்ட 180 பத்திரிக்கையாளர்களின் அலைபேசி எண்கள் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
தரவுத்தளத்தில் ஒரு எண்ணின் இருப்பு கண்காணிப்பின் இலக்கை குறிக்கிறது. ஆனால் அந்த அந்த தொலைபேசி எண்கள் உண்மையிலேயே ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை மொபைல் போன்களில் தடயவியல் சோதனை நடத்திய பிறகே கூற முடியும். கேள்விக்குரிய கருவி ஒரு ஐபோன் என்றால் மிக எளிதாக செய்ய முடியும் என்று தி வையர் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர் ஷிஷிர் குப்தா, இந்தியா டுடேவின் சந்தீப் உன்னிதன், தி இந்துவின் விஜைதா சிங், தி வையரின் ரோஹினி சிங், தி பையனீரின் ஜே. கோபாலகிருஷ்ணன் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட், சி.என்.என்., அசோசியேட்டட் ப்ரெஸ், தி நியூ யார்க் டைம்ஸ், தி ஃபினான்சியல் டைம்ஸ், அல் ஜஜீரா, தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல், மற்றும் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனங்களின் பத்திரிக்கையாளர்கள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/project-pegasus-target-list-express-journalists-on-target-list-324068/