தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் ஜூலை 28ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் இருந்து தொடங்கி வைக்க உள்ளார்.
கடந்த வாரம், அமைச்சர் மா. சுப்பிரமணியன் 137 மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஜூலை 28 ஆம் தேதி தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர், இந்த திட்டம் மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த சேவையை வழங்கும் மருத்துவமனைகள் இந்த திட்டத்தை உள்ளூரில் விளம்பரம் செய்வதன் மூலம் பொதுமக்கள் அதன் பயனை எளிதாக பெறலாம்.
மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75%, தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்ற விகிதத்தில் உள்ளது.
இலவச தடுப்பூசி திட்டத்துடன், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ் தடுப்பூசி போடும் தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசி (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா) ஒரு டோஸ் ரூ .780 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கோவாக்சின் (பாரத் பயோடெக் வழங்கும்) தனியார் மருத்துவமனைகளில் ரூ .1,410 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கின்றன.
இதற்கிடையில், முந்தைய அதிமுக ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட இலவச முகக்கவச விநியோகத் திட்டம் குறித்து விசாரிக்க துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொதுமக்களுக்கு முகக்கவசத்தை இலவசமாக விநியோகிக்குமாறு சட்டமன்றத்தில் திமுக கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, ஆனால் பின்னர் இந்த திட்டம் வருவாய்த் துறையால் செயல்படுத்தப்பட்டது. விநியோகிக்கப்பட்ட மாஸ்க்குகள் தரமற்றவையாக இருந்ததால் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். 26 7 2021
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-mk-stalin-free-vaccination-drive-private-hospital-326287/