ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றிய விவாதங்கள் ஓய்ந்திருந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கொடநாடு மர்மங்கள் தொடர்பாக வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் விரைவில் என்று கூறி புயலைக் கிளப்பியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அவர் உயிருடன் இருந்தபோதும், அவர் மறைவுக்குப் பிறகும் அவ்வப்போது பேசு பொருளாகி வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது கொடநாடு எஸ்டேட்டில்தான் ஓய்வு எடுப்பார். 2016ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட் பேசு பற்றிய பேச்சுகள் எழுந்தன
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அண்மையில் ஒரு செய்தி தொலைக்காட்சி செய்திக்கு அளித்த பேட்டியில், “ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொடநாடு எஸ்டேட்டில் தங்க விரும்பினார். மருத்துவர்கள் அவருக்கு பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்ததால் அவர் அங்கே செல்லவில்லை.” என்று கூறினார்.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், கூவத்தூர் நிகழ்வுகளுக்கு பிறகு, முதலமைச்சராக முயன்ற சசிகலா சிறை செல்ல எடப்பாடி பழனிசாமி முதலமச்சரானார். இதையடுத்து, ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தனர். சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டில் கொடநாடு எஸ்டேட்டில் பல மர்மமான மரணங்கள், கொள்ளை சம்பவங்கள் விபத்துகள் ஏற்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டில் 40 வயதான பாதுகாப்புக் காவலர் ஓம் பகதூர் வாயில் துணி அடைக்கப்பட்டு இறந்து கிடந்தார். பின்னர், அவருடன் வேலை செய்த கிருஷ்ண பகதூருக்கும் கடுமையான காயங்கள் கண்டெடுக்கப்பட்டார். இது ஒரு கொள்ளை முயற்சி என்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு, கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்த 24 வயது இளைஞர் தினேஷ்குமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக கே.வி.சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகப்பட்டனர். பின்னர், கனகராஜ் ஒரு கார் விபத்தில் இறந்தார். சயானும் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஆனால், அந்த விபத்தில் அவருடைய மகளும் மனைவியும் உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போலீசாரால் மீட்க முடியவில்லை. கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் வாலையார் மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த சம்பவத்தில் அதிகாரத்தில் உள்ள உயர் மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் உண்மையை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
கொடநாடு எஸ்டேட் மர்மங்கள் தொடர்பான பேச்சுகள் ஓய்ந்திருந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், ஜூலை 20ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டதாக மிகவும் உயர்மட்டத்தில் உள்ள வட்டாரங்கள் கூறுகின்றன… சில விறுவிறுப்பான ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் உண்மைகளுக்காக காத்திருங்கள்…” என்று ட்விட்டரில் ஆங்கிலத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத் தொடந்து, தமிழிலும், “கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை, விலகாத மர்மங்கள் வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்…விரைவில்…” என்று பதிவிட்டு இருந்தார்.
அஸ்பயர் சுவாமிநாதன் மற்றொரு ட்வீட்டில், “கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்…. ஆதாரங்களுடன் அனைத்தர்கும் அதிர வைக்கும் விடைகள்… Game Over Bro…” என்று கூறி மேலும் புயலைக் கிளப்பினார்.
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு தொடர்பாக, அதிமுக முன்னாள் ஐடி விங் சுவாமிநாதன் ட்விட்டர் பதிவுக்கு அதிமுக ஆதரவாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அஸ்பயர் சுவாமிநாதன் கடந்த மாதம் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், அவர் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அதிமுக ஆதரவு ட்விட்டர் பயனர்கள் விமர்சித்தனர்.
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு தொடர்பாக அஸ்பயர் சுவாமிநாதனின் ட்விட்டர் பதிவு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அவரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் இருந்து பேசினோம்.
கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை, விலகாத மர்மங்கள் வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்… விரைவில் என்று பதிவிட்டுள்ளீர்கள் என்ன நடந்துகொண்டிருகிறது என்று கேள்விக்கு பதிலளித்த அஸ்பயர் சுவாமிநாதன், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எனக்கு தொடர்பில் உள்ள டெல்லி வட்டாரங்கள் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சில வாக்குமூலங்களும் வந்துள்ளன என்று கூறினார்கள். அதனால், அதை தெரிவித்தேன். அது என்ன என்பதை விவரமாக சொல்ல முடியாது.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஒரு கட்டத்தில் யாரும் பேசாமல் அமைதியாகிவிட்டார்கள் இல்லையா, அது முடிந்துவிட்டது என்று பலரும் நினத்தார்கள். ஆனால், அது முடியவில்லை விரைவில் சில உண்மைகள் வெளியே வரும் என்று கூறியுள்ளேன் அவ்வளவுதான் என்று கூறினார்.
உங்கள் கருத்துக்கு அதிமுக ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கொடநாடு வழக்கில் அப்படி பல உண்மைகள் வெளியே வரும்போது அதிமுகவில் ஏதேனும் அதிர்வுகளை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அஸ்பயர் சுவாமிநாதன், “நான் கொடநாடு வழக்குக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறவிலை. புதிய ஆதாரங்கள், வாக்குமூலங்கள் கிடைத்திருக்கிறது. அது வெளியாகும் என்று கூறினேன். சிலர் புரியாமல் இது அதிமுகவுக்கு எதிரானதாக நினைத்து விமர்சிக்கிறார்கள். போன் செய்து மிரட்டுகிறார்கள். நான் சொன்னதை புரிந்துகொண்டதால்தான் அதிமுக தலைவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை.” என்று கூறினார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திமுக அரசின் பங்கு என்னவாக இருக்கும் என்று கணிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அஸ்பயர் சுவாமிநாதன், “கொடநாடு எஸ்டேட் வழக்கு தொடர்பாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, இந்த சம்பவத்தில் முறையாக விசாரணை செய்யப்படவில்லை என்று கூறியிருந்ததாக நினைவு. இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால், இந்த வழக்கை அவர்கள் விசாரணையை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
21 07 2021
source https://tamil.indianexpress.com/tamilnadu/aspire-swaminathan-tweets-on-kodanad-estate-murder-case-new-evidence-325084/