18 07 2021 சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறையில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக, அவரது மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதில் சில அமைச்சர்கள், தலைமைச் செயலகத்தில் தங்களது அறையில் கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்களுடன் உதயநிதியின் புகைப்படத்தையும் மாட்டி வைத்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கட்சி சார்பில் நடைபெறும் விழாக்களில், திமுக தலைவர் ஸ்டாலின் படம் மிகவும் பெரியதாக இடம்பெற்றிருக்கும். அதே அளவில் உதயநிதி ஸ்டாலினின் படம் இடம் பெறுகிறது. கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதைவிட ஒருபடி மேலே போய், சட்டமன்றத்தில் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் உதயநிதியை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை, வழக்கறிஞர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அமைச்சரின் அறையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் ஸ்டாலினின் புகைப்படங்களுக்கு அடுத்தப்படியாக உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது.
இந்த புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தின் உதயநிதியின் படம்… தலைமை செயலகமா? அறிவாலயமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில், முன்னாள் முதலமைச்சர்கள், தலைவர்கள், தற்போதைய முதலமைச்சரின் புகைப்படம் மட்டுமே இடம் பெறும். ஆனால், முதல்முறையாக எம்.எல்.ஏ.,வாக ஆகியுள்ள உதயநிதியின் புகைப்படம் தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-photo-at-minister-office-in-tamilnadu-secretariat-goes-criticise-323986/