செவ்வாய், 27 ஜூலை, 2021

மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்

 obc reservation, obc reservation in medical higher eduation, chenai high court judgement, ஓபிசி, இடஒதுக்கீடு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, high court judgement on obc reservation, மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு, medical higher eduation, all india quota

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(OBC) இட ஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய – மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து, 2021 – 22 முதல் அமல்படுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, குழு அமைக்கப்பட்டுஅறிக்கை அளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை19 விசாரணைக்கு வந்தபோது நடப்பு கல்வியாண்டில் இருந்து இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை நீதிபதிகள் கூறினர். மேலும், இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பின்னரே தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடத்த முடியும் என்று பெஞ்ச் தெளிவுபடுத்தியது. மேலும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை 2021-22 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி “விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைக்க வேண்டும். முடிவை எட்டும் நிலையில், மத்திய அரசு உள்ளது” என்றார். இதையடுத்து, மத்திய அரசின் முடிவை தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

முன்னதாக, மூத்த வழக்கறிஞர் பி வில்சன் ” நடப்பு கல்வியாண்டில் இருந்து இடஒதுக்கீட்டை அமல்படுத்த நீதிமன்றத்தின் தெளிவான அறிவுறுத்தல் இருந்தபோதிலும், சலோனி குமாரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதே தீர்ப்பை காரணம் காட்டி நடைமுறைப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாக வாதிட்டார். மேலும் சலோனி குமாரி வழக்குக்கும் தற்போதைய வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இத்தகைய தெளிவுபடுத்தப்பட்ட போதிலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்த மத்திய அரசு மறுத்துவிட்டது” என கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-centre-decision-on-obc-reservation-in-advance-stage-326600/