“உங்கள் கொள்கை வெற்றிபெற்றால் நமக்கு பெருமை. தோல்வி அடைந்தால் நீங்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும்” இப்படி கண்டிப்புடன் சொன்னவர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். அவர் எதிர்பார்த்ததை போலவே, 1991 ஆம் ஆண்டு ஜூலை 24ல் பட்ஜெட் உரையின் போது தாராளமயமாக்கல் கொள்கையை அறிவித்து, உலகத்தையே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்.
உர மானியத்தை 40 சதவீதம் குறைத்ததுடன், ஒரே நாளில் பொதுத்துறையின் ஏகபோக ஆதிக்கம், கட்டுப்படுத்தப்பட்ட தனியார் வர்த்தகம், உலகச் சந்தையிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றை உடைத்தெறிந்தார். வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி வேகமெடுத்தது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் வளர்ச்சியடைந்தன. தகவல்- தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன துறைகளிலும் இந்தியா தடம் பதித்தது.
ஆனால், இதற்கு முன்பு இருந்த நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. 1990 வளைகுடாப் போரால் எண்ணெய் விலை 3 மடங்கு அதிகரித்திருந்தது. குவைத் மீது ஈராக் தாக்குதல் நடத்தியதால், குவைத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல், வி.பி.சிங் தலைமையிலான அரசு இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாநிலங்களில் வெடித்த போராட்டம், அத்வானியை கைது செய்ததால் ஏற்பட்ட கூட்டணி முறிவு என, மத்திய அரசியலில் ஏற்பட்ட ஸ்திரத் தன்மையின்மை, ஆட்சி கவிழ்ப்புக்கு வழிகோலியது.
இந்த நிலையில் தான், 1991ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பி.வி.நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றது. யாரை பிரதமராக்குவது என்ற போட்டிக்கு இடையே பிரதமரானார் பி.வி. நரசிம்மராவ். அமைச்சரவைச் செயலாளர் நரேஷ் சந்திரா அளித்த ரகசிய குறிப்பை கேட்டு அதிர்ந்து தான் போனார் நரசிம்மராவ். நாட்டின் கையிருப்பு வெறும் 89 கோடி டாலர் மட்டுமே இருக்கிறது. இரண்டு வார இறக்குமதிக்குத் தேவையான அளவு மட்டுமே அந்நியச் செலாவணி இருக்கிறது உடனே ஏதாவது செய்யுங்கள் என்பது தான் அது. ஒரு நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையாக வளர்கிறது என்பதற்கு ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியின் மதிப்பு குறைகிறது என்பதை உணர்ந்த நரசிம்மராவ், மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து “இவர் தான் சரிப்பட்டு வருவார்” என, மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கினார்.
பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் கொள்கை அனுமதிக்கப்பட்டு, இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதை நினைவுகூர்ந்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த முயற்சியைத் தொடங்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததை பெருமையாகக் கருதுவதாக கூறியுள்ளார். மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான, ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமராக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிய மன் மோகன் சிங், நிதியமைச்சராக மேற்கொண்ட முதல் நடவடிக்கையே அதிரடியாக அமைந்தது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
24 07 2021
source https://news7tamil.live/liberalization-introduce-ex-prime-minister-manmohan-singh-in-1991.html