திங்கள், 19 ஜூலை, 2021

சட்டமன்ற மண்டபத்தில் தலைவர்களின் உருவப்படங்கள் – விரிவான ரிப்போர்ட்

 19 07 2021 மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் சட்டமன்ற மண்டபத்தில் குடியரசுத்தலைவரால் திறக்கப்பட இருக்கிறது. இந் நிலையில், அங்குள்ள தலைவர்களின் உருவப்படங்கள் எப்போது திறக்கப்பட்டது என்பது பற்றிய ரிப்போர்ட்.

தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் 15 தலைவர்களின் படங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக கடந்த 1948ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி மகாத்மா காந்தியின் உருவப் படம் திறக்கப்பட்டது. அடுத்த ஒரு மாதங்களுக்குள்ளாக ராஜாஜியின் உருவப்படத்தை அப்போது பிரதமராக இருந்த நேரு திறந்து வைத்தார்.

1964 ஆம் ஆண்டு மாா்ச் 22இல் திருவள்ளுவரின் படத்தை குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜாகீா் ஹுசேன் திறந்தார். அண்ணாவின் உருவப் படத்தை 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 10 இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி திறந்து வைத்தாா். எம்.ஜி.ஆா். முதலமைச்சராக இருந்த போது 5 தலைவர்களின் உருவப் படங்கள் திறக்கப்பட்டன.

காமராஜரின் உருவப்படத்தை 1977 ஆகஸ்ட் 18இல் அப்போதைய குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தார்.

தந்தை பெரியாா், அம்பேத்கா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில் ஆகியோரின் உருவப் படங்களை திறக்கும் நிகழ்வு 1980ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 இல் நடைபெற்றது. 5 தலைவர்களின் படங்களையும் அப்போதைய கேரள ஆளுநா் ஜோதி வெங்கடாசலம் திறந்தாா்.

ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றதும், 1992 ஜனவரி 31இல் எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை அவரே திறந்து வைத்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் உருவப்படம் கடந்த 2018 பிப்ரவரி 11 இல் திறக்கப்பட்டது

ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப் படம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 19 இல் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் 2021 பிப்ரவரி 23 ஆம் தேதி தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் திறக்கப்பட்டது. 16ஆவதாக கருணாநிதியின் உருவப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/portraits-of-leaders-in-the-assembly-hall.html