வெள்ளி, 23 ஜூலை, 2021

வருமான வரியை சேமிக்க சிறந்த 5 வழிகள்;

2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலத்தை சிறந்த வரி திட்டமிடலுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் முதலீடுகள், வருவாய் மற்றும் பிற வகைகளில் நீங்கள் கோரக்கூடிய சில வரி விலக்குகளைப் பார்க்கலாம்.

பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (PPF)

சுயதொழில் செய்பவர்கள், அதிக ஓய்வூதியம் வேண்டும் என்கிறவர்கள், சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்படாதவர்கள் எனப் பலரும் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். தபால் அலுவலகம், வங்கிகள் மூலம் முதலீடு செய்து வருமான வரியை மிச்சப்படுத்த முடியும்.

இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 8% வட்டி தரப்படுகிறது. முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாக இருக்கிறது.

பி.எஃப் போல், இதன்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி இல்லை. ஆறாவது ஆண்டிலிருந்து கடன் பெறும் வசதி இருக்கிறது. இதற்கான வட்டி, முதலீட்டுக்கு அளிக்கப்படும் வட்டியைவிட 2% அதிகமாக இருக்கும்.


 தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)

தபால் அலுவலகத்தின் ஐந்தாண்டு முதலீட்டுத் திட்டமான தேசிய சேமிப்புச் சான்றிதழில் (என்.எஸ்.சி) செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. வட்டி வருமானம் ஆண்டுக்கு 8%. வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது. இது பாதுகாப்பான முதலீடு என்றாலும், இதன்மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டும். அடிப்படை வருமான வரம்பு 5 சதவிகிதத்தில் இருப்பவர்களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களுக்கும் ஏற்றது.

சுகாதார காப்பீட்டு பிரீமியம்

நீங்கள் ஏதேனும் சுகாதார காப்பீடு எடுத்திருந்தால் அல்லது வழக்கமான சுகாதார பரிசோதனையைப் பெற்றிருந்தால், பிரிவு 80 டி இன் கீழ் பிரீமியத்தை கோரலாம்.

உங்களுக்காக, மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக நீங்கள் ஒரு சுகாதார காப்பீட்டுக் கொள்கையை எடுத்திருந்தால், நீங்கள் ரூ .25,000 வரை பிரீமியம் கோரலாம். இதில் பெற்றோரின் வயது 60 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால், வரி விலக்கு வரம்பு ரூ .50,000 ஆக இருக்கும். ரூ.5000 சுகாதார பரிசோதனையும் இதில் கிடைக்கிறது. இருப்பினும், வரி விலக்கு சுகாதார காப்பீட்டின் பிரீமியத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.

வீட்டுக் கடன் அசல்

சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதற்கு வாங்கும் வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலில் ரூ. 1.5 லட்சம் ரூபாய் வரை நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து முதலீடுகள் மற்றும் செலவுகளைச் சேர்ந்து 80சி பிரிவின் கீழ் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

வீட்டு வாடகைக்கு வரிச் சலுகை (80GG)

சம்பளத்துடன் வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கவில்லை என்றால், நிபந்தனைக்கு உட்பட்டு மாதம் அதிகபட்சம் ரூ.5,000 வரை வீட்டு வாடகையை வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

கல்விக் கடன் வட்டி (80E)

வரிதாரர் வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியைத் திரும்பக் கட்டுவதில் வரிச் சலுகை இருக்கிறது. நிதியாண்டில் செலுத்தும் வட்டிக்குக் கிடைக்கும் வரிச் சலுகைக்கு வரம்பு இல்லை. வட்டி கட்ட ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் வரை தான் வரிச் சலுகை கிடைக்கும்.

source https://tamil.indianexpress.com/business/smart-ways-to-save-income-tax-for-salaried-employees-324918/