ஞாயிறு, 25 ஜூலை, 2021

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு: உடைந்தது பாலம், 9 பேர் உயிரிழப்பு

 

25 07 2021 இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு நிலச்சரிவு
ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என வானிலை ஆய்வு மையம் சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் அந்த மாநிலத்தின் கின்னார் (Kinnaur) மாவட்டத்தின் சங்லா
பள்ளத்தாக்கில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற
சுற்றுலா வேன் ஒன்று நிலச்சரிவில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தோ- திபெத்
எல்லை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக சங்லா பள்ளத்தாக்கில் உள்ள பட்சேரி (Batseri bridge)
பாலம் இடிந்து விழுந்தது. மலையில் இருந்து கற்களும் பாறைகளும் புழுதியோடு
உருண்டு வருவதும் பாலம் உடையும் காட்சிகளின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் விரைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள்
மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கின்னார் போலீஸ் எஸ்பி, சஜு ராம் ராணா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/9-killed-3-injured-in-himachal-pradesh-landslides.html

Related Posts: