தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை அன்று (08/07/2021) திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் ஏற்படும் கரை அரிப்பு தொடர்பாக மேற்பார்வை பணிகளை மேற்கொண்டார். படகில் வந்த அவரை, மீனவர்கள் கரைக்கு தூக்கி வரும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் நீரில் கால் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக படகின் அருகே ஒரு சிவப்பு நிற நாற்காலி போடப்பட்டிருக்கிறது. அதில் ஏறிய அவரை, மீனவர்கள் தூக்கிக் கொண்டு வந்து கரையில் விடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தன் மீதுள்ள அன்பின் காரணமாக மக்கள் அவரை தூக்கி வந்ததாகவும், அவர் தன்னை தூக்கிக் கொண்டு வந்து கரையில் விடமாறு கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். பழவேற்காடு பகுதியில் சோதனை செய்வதற்காக சென்ற அவர் நாற்காலியில் ஏறி பிறகு படகில் அமர்ந்தார். துறைசார் அலுவலர்கள் பலரும் அவருடன் பயணித்து, ஆய்வுகளை மேற்கொண்டு பிறகு கரைக்கு திரும்பினார்கள். அப்போது இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அவரின் காலணி நீரில் பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பது இந்த வீடியோவில் தெளிவாகவே தெரிகிறது. 10 அடி தூரத்தில் இருக்கும் கரையை நடந்து கடக்க யோசிக்கும் வி.ஐ.பி. கலாச்சாரத்தில் அமைச்சர் இருக்கிறார் என்று பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் விமர்சனம்
தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு” என்று விமர்சனம் செய்துள்ளார்.
68 வயதான அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 2009ம் ஆண்டுக்கு முன்பு அவர் அதிமுகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-minister-carried-by-fishermen-to-the-shore-321562/