வியாழன், 8 ஜூலை, 2021

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

07/07/2021  பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து ஹர்ஷ்வர்தன், தாவர் சந்த் கெலோட், ரமேஷ் பொக்கிரியால் உள்ளிட்டோர் தங்கள் அமைச்சர் பதவியை இன்று (ஜூலை 7) ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து 43 பேர் புதிய மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிரதமர் மோடி நரேந்திர மோடி 2வது முறையாக 2019ம் ஆண்டு ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அவருடன் பல மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி, தனது மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, நேற்று மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தாவர் சந்த் கெலோட் கர்நாடகா ஆளுநாராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி அமைச்சரவையை மாற்றி அமைக்கிறார் என்பது உறுதியானது.

இருப்பினும், பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் புதிய முகங்கள் யார் யாருக்கு வாய்ப்பு அளிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பதவி வகித்து வந்த ஹர்ஷ்வர்தன், தாவர் சந்த் கெலோட், ரமேஷ் பொக்கிரியால் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகரும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள், “ஹர்ஷ்வர்தன், தாவர் சந்த் கெலோட், ரமேஷ் பொக்கிரியால், சதானாந்த கௌடா, சந்தோஷ் கங்வார், தேபஸ்ரீ சௌதுரி, ரத்தன் லால் கட்டாரியா, சஞ்ஜய் தோட்ரே, பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் ரோசப் பாட்டீல், பாபுல் சுப்ரியோ, அஸ்வினி சௌபே ” ஆகிய 12 மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு முன்னதாக, புதன்கிழமை மாலை அமைச்சராக சாத்தியம் உள்ளவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பாஜகவின் நாராயண் ரானே, சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா, அஜய் பாட், பூபேந்தர் யாதவ், ஷோபா கரண்ட்லேஜே, சுனிதா டுக்கல், மீனாட்சி லேக்கி, பாரதி பவார், சாந்தனு தாகூர், கபில் பாட்டில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஆர்.சி.பி சிங் மற்றும் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த பசுபதி பரஸ், அப்னா தளத்தின் அனுபிரியா படேல் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

இதனிடையே, பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில், புதியதாக பதவியேற்க உள்ள 43 தலைவர்களின் பட்டியல் வெளியானது. அதன்படி, இன்று மாலை (ஜூலை 7) ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமானம் செய்து வைக்க 43 பேரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டனர்.

source https://tamil.indianexpress.com/india/pm-modi-cabinet-reshuffles-union-ministers-resigns-including-harsh-vardhan-ramesh-pokhriyal-321014/

Related Posts: