07/07/2021 Tamilnadu news in tamil: நேற்று திண்டிவனம் அருகே உள்ள குருவம்மாபேட்டை கிராமத்தில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அதிமுக எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து நிர்வாகிகளுடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சிவி சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் மத்தியில் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுகவினர் ஆட்சிக்கு வந்துள்ளனர். திமுக தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தமிழக மக்கள் விருப்பப்பட்டு யாரும் வாக்களிக்கவில்லை.
இதில், அதிமுகவின் கூட்டணி முடிவு, திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்த தேர்தலில் நாம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான். இதன்காரணமாக சிறுபான்மையினரின் மொத்த வாக்குகளையும் நாம் இழந்து விட்டோம். அதிமுக மீது சிறுபான்மையின மக்களுக்கு எந்த வருத்தமும், கோபமும் இல்லை. அவர்களின் கொள்கை ரீதியாக பாஜக உடன் வரும் முரண் பட்டிருந்தார்கள். இதன்காரணமாக பாஜக கூட்டணி வைத்த நமக்கும் அவர்கள் வாக்களிக்கவில்லை என்று பேசியிருந்தார்.
மேலும், “வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் சுறுசுறுப்புடனும், ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும். துரோகிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. விசுவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றும் முன்னாள் அமைச்சர் சண்முகம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் பாஜகவுடன் அமைத்த கூட்டணி தான் என்று குறிப்பிட்டு பேசியிருந்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசியுள்ள பாஜகவின் மாநில செயலாளர் கே.டி. ராகவன்,”உங்களால் தான் நாங்களும் தோல்வியடைந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த செய்திக்கு நெட்டிசன்கள் வழக்கம் போல தங்களை கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து பதிவிட்டுள்ள ஒரு வலைதள வாசி, ‘கண் கெட்ட பிறகு கதிரவன் நமஸ்காரம்’ என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ “பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் தான் அதிமுக தோற்க நேரிட்டது” – சி.வி.சண்முகம், ‘இதையே இப்ப தான் கண்டு பிடிக்கிறாங்களா?’ என்று கூறியிருக்கிறார்.
‘அதிமுக வுக்கு இழப்பு என்பது உண்மைதான், துணிந்தபின் துயர் எதற்கு?’ என இன்னொரு வலைதள வாசி குறிப்பிட்டுருக்கிறார். முன்னாள் அமைச்சர் பாஜக குறித்து பேசியிருப்பதால் அவர் வீட்டிற்கு ‘ரெய்டு கான்பார்ம்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.