மலேசியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமியின்(102) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
1920-ல் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர் அஞ்சலை. அப்போது அஞ்சலைக்கு 21 வயது. இரண்டாம் உலகப் போரின் போது, மலேசியாவில் ஜப்பானியப் படைகள் ஊடுருவினர். அப்போது, இந்தியப் பெண்கள் ராணுவ உடையுடன் கம்பீரமாக இருப்பதை பார்த்த அஞ்சலைக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை வந்தது
இவர்கள் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்ஸி ராணி பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவை பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க 1943-ல் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய படை இது. அந்த பெண்களை பார்த்து, உத்வேகமடைந்த அஞ்சலை, நாட்டின் சுதந்திரத்துக்காக, தன்னையும் அந்த படையில் அர்ப்பணித்துக் கொண்டார்.
பிறகு, சிங்கப்பூருக்கு ராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். அங்கு, துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு, துப்பாக்கி உள்பட பல்வேறு வகையான ஆயுதங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றார். பிறகு அங்கிருந்து பர்மாவுக்கு (மியான்மர்) அனுப்பப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது. இதனால் அஞ்சலையும் மலேசியாவுக்குத் திரும்பினார். பிறகு 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார்.
இந்நிலையில், 102 வயதான அஞ்சலை பொன்னுசாமி, வயது மூப்பால் மே 31 ஆம் தேதி, மலேசியாவில் காலமானார்.
source https://tamil.indianexpress.com/international/ina-veteran-anjalai-ponnusamy-passes-away-pm-modi-expresses-anguish-461855/