திங்கள், 13 ஜூன், 2022

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி சேர்மன்

 

virudhunagar, aruppukottai, sexual harrassement, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கல்லூரி சேர்மன் பாஜகவில் இருந்து நீக்கம், Aruppukottai college chairman daswin john grace sacked from bjp, bjp, sexual allegation

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் பாஜக பிரமுகரும் கல்லூரி சேர்மனுமான தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் (38). இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்தார்.

இவர் 6 மாதங்களுக்கு முன்பு, அவருடைய கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபசமாகப் பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ, தற்போது அங்கே படித்து வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் மாணவிகளும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விடுமுறை நாள் என்பதால், கல்லூரி மூடப்பட்டிருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி சேர்மனை கைது செய்ய வேண்டும், மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். கல்லூரி கட்டணத்தையும் சான்றிதழ்களையும் திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

அருப்புக்கோட்டை டி.எஸ்.பி சகாய ஜோஸ், வட்டாட்சியர் அறிவழகன், அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மாணவிகள் மறியலைக் கைவிட்டனர்.

இதையடுத்து, கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் என 2 பிரிவுகளின் கீழ் அருப்புக் கோட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கான, உத்தரவை விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக பிறப்பித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/aruppukottai-college-chairman-daswin-john-grace-sacked-from-bjp-after-sexual-allegation-466041/