10 12 2022
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இதற்கு முன்னதாக தாக்கிய புயல்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்
2005 – பியார், பாஸ், ஃபர்னூஸ் ஆகிய புயல்கள் வங்கக் கடலில் உருவாகின. இதில் டிசம்பர் மாதம் உருவான ஃபர்னூஸ் புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. பயிர்கள் சேதம், பல மாவட்டங்கள் வெள்ளக்காடானது. ஃபர்னூஸ் புயல் Dec 7ம் தேதி 101 கி.மீ வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. கடலூர் மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
2008 – நிஷா
2008-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி வங்கக் கடலில் நிஷா புயல் உருவானது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான மிகப்பெரிய புயலால், 20நாட்களுக்கு மேல் கனமழை பெய்தது, பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 170-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாயின. 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், குடியிருப்புகள் சேதமடைந்தன.
2010 – ஜல் புயல்
2010-ம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் பக்கம் நகர்ந்து, நவம்பர் 6-ம் தேதி 111 கி.மீ வேகத்தில் சென்னையைக் கடந்து சென்றது. இந்தப் புயலின் தாக்கத்தினால் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்த ஆண்டே வங்கக் கடலில் உருவான நிஷா புயலினால் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. பல்லாயிரம் மரங்கள் முறிந்தன. சுமார் 40 ஆயிரம் மின் கம்பங்கள் விழுந்து, இயல்பு வாழ்க்கை முடங்கியது.
2011 – தானே புயல்
2011 டிசம்பர் மாதம் தானே புயல் புதுச்சேரி – கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கடலூர் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பல்லாயிர கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து, பெரும் பொருளாதார, வாழ்வாதார இழப்பை ஏற்படுத்தியது.
2012 நீலம் புயல்
2012-ம் ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி வங்கக்கடலில் நீலம் உருவானது. பல இடங்களில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. 20-க்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பெருமளவு உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.
2013 – மடி
2013ம் ஆண்டு டிசம்பரில் மடி புயல் உருவானது. வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
2016 – வர்தா புயல்
மடி புயலுக்கு மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 2016ம் ஆண்டு, ரோனு, கியான்ட், நடா புயல்களாலும் பெரிய அளவில் பாதில்லை. ஆனால், அந்த ஆண்டு இறுதியில் அடித்த வர்தா அதி தீவிர புயல் சென்னை பழவேற்காடு அருகே கடந்து சென்றது. இதனால், பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரம் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தலைநகர் சென்னையை பெரிதும் முடக்கிப் போட்டது. பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியது.
2017 – ஒக்கி புயல்
கடந்த 2017ம் ஆண்டு வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ஒக்கி புயல், நவம்பர் 30-ம் தேதி நாட்டின் கடைகோடி பகுதியான கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு, கேரளா அண்டை நாடான இலங்கையில் என 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டவர்களை காணாத நிலை ஏற்பட்டது.
2018 – அடுத்த ஆண்டான 2018ம் பெரும் சோகமாக இருந்தது. நவம்பர் மாதத்தில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உருக்குழைந்துப் போட்டது. 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தென்னை, வாழை, தேக்கு என பல்லாயிரம் மரங்கள் அடியோடு விழுந்தன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. பல்லாயிரம் படகுகள் நொறுங்கின. பல நூறு
கிராமங்களை சிதைத்துப் போட்டது. மக்களின் வாழ்வாதாரத்தையே முடக்கியது. இன்னும் இதன் தாக்கம் தொடர்கிறது.
2019ம் ஆண்டு ஃபனி புயல் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், ஒடிசா மற்றும் வங்க தேசத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
2020ம் ஆண்டு நவம்பரில் வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இதனால், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை & டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளை நிலங்களில் பாதிப்பு, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 200க்கும் மேற்பட்ட மின் மாற்றிகளும் சேதமடைந்தன.
புயல்களும் பெயர்களும்
சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதும் நிலவும் தட்ப, வெப்ப நிலைகளைக் கண்காணித்து, எச்சரித்து வருகிறது சுவிட்சர்லாந்த்தில் உள்ள இந்த அமைப்பின் கீழ் இந்திய உள்ளிட்ட 190க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இதன் உறுப்பு நாடுகளை 7 மண்டலங்களாகப் பிரித்துள்ளது. வட இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 8 நாடுகள் உள்ளன.
இந்த நாடுகள் தலா 8 பெயர்கள் என 64 புயல் பெயர்களைக் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவாகும் போது, இந்த பட்டியலில் உள்ள பெயர்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இந்தியாவில் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் 2004-ம் ஆண்டு தொடங்கியது.
source https://news7tamil.live/last-15-years-storms-hit-tamil-nadu.html