சனி, 31 டிசம்பர், 2022

பள்ளிகளுக்கு இணையம் வழியே அங்கீகாரம்: முதல்வர் அறிமுகம்

 

30 12 2022

பள்ளிகளுக்கு இணையம் வழியே அங்கீகாரம்: முதல்வர் அறிமுகம்

தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளை பெரும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்தனர்.

தலைமை செயலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர்கள் கூறியதாவது:

“பள்ளிக்கல்வித் துறையின் https://tnschools.gov.in என்ற வலைத்தளத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான இணைய முகப்பு வாயிலாக https://tnschools.gov.in/dms/?lang=en சுயநிதிப் பள்ளிகள் தொடங்க அனுமதி, ஆரம்ப அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், கூடுதல் வகுப்பு தொடங்க அனுமதி, கூடுதல் பிரிவுகள்/ மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் பள்ளி நிருவாக மாற்றத்திற்கான அனுமதி போன்ற பல்வேறு சேவைகளையும் இணையம் வழியாக மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, பள்ளிகள் அரசின் உரிய அனுமதியை ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படையாகவும் விரைவாகவும் பெற இயலும். இதனால் சுமார் 15,000 சுயநிதிப் பள்ளிகள் பயன்பெறும்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை ஆணையர் திரு. க.நந்தகுமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-chief-minister-m-k-stalin-launched-a-plan-for-private-schools-568088/