புதன், 21 டிசம்பர், 2022

உங்களில் இந்த நாட்டிற்காக உயிரைக் கொடுத்தது யார்?’

 20 12 2022

பா.ஜ.க-வை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கே… ‘உங்களில் இந்த நாட்டிற்காக உயிரைக் கொடுத்தது யார்?’

சுதந்திரப் போராட்டத்தின்போது பா.ஜ.க-வின் நாய்கூட உயிரிழக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சுதந்திரப் போராட்டத்தின் போது பா.ஜ.க-வின் பங்கு குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் கட்சியின் கூச்சல்களுக்கு மத்தியில், மல்லிகார்ஜுன கார்கே தனது தாக்குதலைக் கூர்மைப்படுத்தினார். பா.ஜ.க-விடம் “சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இப்போதும் சொல்ல முடியும்” என்று கூறினார்.

“ராஜஸ்தானின் அல்வாரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் சொன்னது சபைக்கு வெளியே கூறியது. நான் சொன்னது அரசியல் ரீதியாக சபைக்கு வெளியே, சபைக்கு உள்ளே அல்ல. அதைப் பற்றி இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

பா.ஜ.க-வை “மாஃபி மாங்னே வாலே லாக் (மன்னிப்பு கேட்கும் நபர்கள்)” என்று கூறிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “மன்னிப்பு கேட்கும் நபர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள்… இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள் என்று நான் கூறினேன். இந்த நாட்டின் ஒற்றுமைக்காக உங்களில் யார் உயிரைக் கொடுத்தார்கள்?” என்று கூறினார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற பேரணியில், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆற்றிய பங்கை பற்றி மல்லிகார்ஜுன கார்கே பேசினார். “உங்கள் வீட்டில் இருக்கும் நாயாவது நாட்டுக்காக இறந்ததா? இன்னும் அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேஷ்ட்ரோஹி (தேச விரோதிகள்) என்று கூறுகிறார்கள்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 11வது நாள் அமர்வில் இன்று (டிசம்பர் 20) மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துகள் தொடர்பாக பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே சூடான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

“ஆல்வாரில் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மத்திய வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ராஜ்யசபாவில் வலியுறுத்தினார்.

இதற்கு, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சுதந்திரப் போராட்டத்தின் போது பா.ஜ.க-வின் பங்கு குறித்து கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.



source https://tamil.indianexpress.com/india/mallikarjun-kharge-attacks-on-bjp-who-among-you-gave-your-life-for-this-country-561926/