யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு, தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் இந்த மாதிரி நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். இந்த மாதிரி தேர்வில் கலந்துக் கொள்பவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.5000 வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி தேதியாகும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் அடங்கிய அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் தங்குமிடம் மற்றும் உணவு கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. இங்கு 25000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தேர்வர்கள் பயிற்சி பெறுவதற்காக இலவச அணுகலுடன் உள்ளது. இதுபோன்ற வசதிகளுடன் இந்தப் பயிற்சி மையம் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில், இந்தப் பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 18 தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்ற தகவலை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் அவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள உள்ளனர். இதற்காக அவர்களை தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதேநேரம், இந்த மாதிரி நேர்முகத் தேர்வில் பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்ற மாணவர்கள் தவிர முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து தேர்வர்களும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நேர்முகத் தேர்வு தேர்வர்களுக்குப் பெரிய பயிற்சியாக இருப்பதோடு, தங்கள் செயல்பாட்டில் இன்னும் எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவையும் தரும். ஏனெனில் இந்த மாதிரி நேர்முகத் தேர்வை ஆறு குழுக்கள் நடத்த உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தலைமைச் செயலாளர் நிலையில் பணிபுரிகிறவர்கள், மாவட்ட ஆட்சியர்களாகப் பணியாற்றியவர்கள், குடிமைப்பணித் தேர்விற்குப் பயிற்சி அளிக்கும் பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றைத் துல்லியமாகப் பரிசீலனை செய்யும் உளவியல் நிபுணர்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நேர்காணல் 02.01.2023 திங்கட்கிழமை மற்றும் 03.01.2023 செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் நாள் காலை நேர்காணல் குறித்தும் அதில் தேவைப்படுகிற திறன்கள் குறித்தும், தேர்வர்களுக்கு எடுத்துக் கூறப்படுவதுடன் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும். பின்னர் அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். மேலும் தேர்வர்களுக்கு மாதிரி நேர்காணலுக்கான காணொலி பதிவு வழங்கப்படும். கலந்துகொள்ளுபவர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் மதிய உணவு வழங்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
நேர்காணலில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு மாதிரி நேர்காணலில் அவர்களின் செயல்பாடு குறித்த சான்றிதழ் மற்றும் நேர்காணலில் கலந்துகொள்வதற்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மாதிரி நேர்காணலுக்கு விண்ணப்பிக்கத் தேர்வர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை (சுயவிவரக் குறிப்புடன் DAF I & DAF II) பயிற்சி மைய முதல்வருக்கு alcscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ 29.12.2022க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவத்தை www.civilservicecoaching.com என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு மேற்கண்ட இணையத்தளத்தை அணுகவும்.
25 12 2022
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-govt-provide-rs-5000-for-upsc-aspirants-and-conduct-model-personality-test-564689/