29 12 2022
கோவை அருகே அசோகபுரம் ஊராட்சியில் பா.ஜ.க கொடி கம்பம் நட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க கொடிகம்பம் கூட வேண்டாம், அது தீண்டாமையை உருவாக்கும் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்
கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சி பகுதியில் காந்தி காலனி உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தீண்டாமை பிரச்சனையால், பா.ஜ.க கட்சிக்கு அனுமதியில்லை என்ற ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவும் கொண்டாடப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காந்தி காலனி மக்கள் ஏன் பா.ஜ.க.,வை வெறுக்கிறார்கள்
பா.ஜ.க கொடிக்கம்பம் குறித்த சர்ச்சை தொடர்பாக காந்தி காலனி பகுதிவாசி லெனின் கூறியதாவது,
30 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க கட்சியினரால், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து இப்பகுதியில் பா.ஜ.க கட்சி வேண்டாம் என ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது. இப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா இதுவரை கொண்டாடப்பட்டதில்லை. பா.ஜ.க வந்தால் தீண்டாமை பிரச்சனை தலைதூக்கும் என்பதால், மக்கள் அறவே புறக்கணித்துள்ளனர். ஆதிக்க சாதியினர் கோவிலுக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. அதனால் நாங்களும் போகவில்லை என்றார்.
அண்மையில் காந்தி காலனியை சேர்ந்த சின்ராசு மற்றும் அவரது மகன் சேகர் ஆகிய இருவரும் பா.ஜ.க கட்சியில் இணைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அப்பகுதியில் பா.ஜ.க கொடி கம்பம் நட முயன்றுள்ளனர். ஆனால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பிரச்சனை வெடித்துள்ளது.
இப்பிரச்சனை தொடர்பாக அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையிடம் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், தங்கள் பகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் கொடி கம்பம் ஏற்கனவே இருக்கிறது. அதனருகில் பா.ஜ.க கொடியை நட கடந்த 23 ஆம் தேதி குழி தோண்டியுள்ளனர். 24 ஆம் தேதி புதிதாக கொடி கம்பம் நட இருந்தபோது, அப்பகுதி மக்கள் இதை கண்டித்துள்ளோம். இக்கட்சி வந்தால், ஊரில் தீண்டாமை பிரச்சனை ஏற்பட்டு விடும் என்பதால் மறுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
கொடி கம்பம் நட்டே தீருவேன் என சின்ராசு மற்றும் சேகர், கனகராஜ் உடன் அருகிலிருந்த ஊர்களில் இருந்து வந்த பா.ஜ.க.,வினர் , அங்கிருந்த மக்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காந்தி காலனி மக்கள் வருவாய் ஆய்வாளர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளரிடம் இது குறித்து புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சின்ராசு, சேகர், கனகராஜ் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக பா.ஜ.க கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தகவலாக தெரிவிக்கையில் அனைத்து கட்சி கொடி கம்பம் இருக்கும்போது, அப்பகுதி மக்கள் தங்கள் கட்சியின் கொடி கம்பத்தை வேண்டாம் என்று புகார் கொடுத்துள்ளனர். ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், கொடி கம்பம் நடுவதற்குரிய வழிகளை பார்ப்போம் என்றார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க கட்சியினரால் பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முன்பும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இளைஞர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்தனர். இதனால் பா.ஜ.க வேண்டாம் என முடிவெடுத்தோம். நமது இளைஞர்களுக்குள் இக்கட்சி வந்தால், பிரச்சனை ஏற்படும் என்பதால், கொடி கம்பம் வேண்டாம் என ஊர் மக்கள் சேர்ந்து புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர் அசோகபுரம் ஊராட்சியில் உள்ள காந்தி காலனி பகுதிவாசிகள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் கட்சியாக பா.ஜ.க.,வினர் தங்களை முன்னிலைப்படுத்தினாலும் பல இடங்களில் மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
source https://tamil.indianexpress.com/tamilnadu/kovai-people-complaint-against-to-set-bjp-flag-pole-567345/