வியாழன், 22 டிசம்பர், 2022

வேகமெடுக்கும் கொரோனா பரவல் – இந்தியாவில் 4 பேருக்கு ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் பாதிப்பு

 

22 12 2022

சீனாவில் கொரோனா மீண்டும் பரவ காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வகை வைரஸ் குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் இந்த வகை வைரஸ் தொற்று முதன்முதலாக குஜராத்தில் கண்டறியப்பட்டதாகவும், இதுவரை குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தலைமையில் கொரோனா பரவல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் வேகமாக பரவும் சூழல் உள்ளதால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மண்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சீனாவில் ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோயாளிகள் குவிந்து வருவதால் மருத்துவமனைகளின் முன்பு வாகனங்கள் வரிசையில் நிற்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

source https://news7tamil.live/accelerating-corona-spread-4-people-infected-with-omicron-pf-7-virus-in-india.html