வெள்ளி, 30 டிசம்பர், 2022

சென்னை வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு

 29 12 2022

சென்னை வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் இந்த சமயத்தில், புது விதமான வேரியண்ட் சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதிலும் தீவிரமாக இருக்கின்றனர்.

மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் இதே முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்றிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக விமான நிலையங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.

சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளில் அல்லது வேறு நாடுகளில் இருந்து வந்தாலும், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பயணிகளின் விவரங்கள் சேகரித்து தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துபாய், கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த வாலிபருக்கும், பல்லாவரத்தை சேர்ந்த வாலிபருக்கும் நடத்திய சோதனையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த இரண்டு நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலங்குடியை சேர்ந்தவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர வாலிபர் குறித்து ஆந்திர மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் இவர்கள் நான்கு பேருக்கும் எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை அறிந்து கொள்ள நான்கு பேரின் ரத்த மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு இவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

விமானத்தில் இவர்கள் நான்கு பேருடன் அமர்ந்து வந்த பயணிகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/passengers-from-cambodia-dubai-infected-with-covid-567209/